துப்பாக்கி வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் இந்தி நடிகர் சல்மான்கான் விடுதலை

மான்களை வேட்டையாட துப்பாக்கி வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் விடுதலை செய்யப்பட்டார்.

Update: 2017-01-18 23:07 GMT
ஜோத்பூர்,

மான்களை வேட்டையாட துப்பாக்கி வைத்திருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் விடுதலை செய்யப்பட்டார்.

சல்மான்கான் மீது வழக்கு

51 வயதாகும் பிரபல இந்தி நடிகர் சல்மான்கான் 1998-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தி சினிமா படப்பிடிப்புக்காக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகேயுள்ள கன்கானி என்ற கிராமத்தில் தங்கியிருந்தார். அப்போது அவர் காட்டுப்பகுதிக்கு சென்று 2 கலைமான்களை வேட்டையாடிதாக புகார் கூறப்பட்டது.

இதையடுத்து அபூர்வ வகை விலங்கினத்தை வேட்டையாடியது மற்றும் காலாவதியான துப்பாக்கி உரிமம் வைத்திருந்தது, அதை சட்டவிரோதமாக பயன்படுத்தியது தொடர்பாக அவர் மீது 2 வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர்.

ஆதாரம் இல்லை

இதில் ஆயுத சட்டப்பிரிவின் கீழ் தொடரப்பட்ட வழக்கு ஜோத்பூர் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு மற்றும் சல்மான்கான் தரப்பு வாதங்கள் கடந்த 9-ந்தேதி முடிவடைந்தது. அப்போது சல்மான்கான் தரப்பு வக்கீல் வாதிடுகையில், “கன்கானி கிராமத்தில் சல்மான்கான் தங்கியிருந்தபோது துப்பாக்கி வைத்திருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படவில்லை. தவிர, அவர் வைத்திருந்ததது ஏர்கன் ரக துப்பாக்கிதான்” என்றார்.

இந்த வழக்கில் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தல்பத் சிங் ராஜ்புரோட்டி நேற்று தீர்ப்பு வழங்கினார். கோர்ட்டுக்கு சல்மான்கான் தனது சகோதரி அல்விராவுடன் வந்திருந்தார். தீர்ப்பையொட்டி 150-க்கும் மேற்பட்ட போலீசார் கோர்ட்டு வளாகத்தில் குவிக்கப்பட்டு இருந்தனர்.

விடுதலை

102 பக்கம் எழுதப்பட்ட தீர்ப்பை வாசித்த மாஜிஸ்திரேட்டு, “சல்மான்கான் துப்பாக்கி வைத்திருந்தார் என்பதும், காலாவதியான துப்பாக்கி உரிமம் வைத்திருந்தார் என்பதும் சரிவர நிரூபிக்கப்படவில்லை. எனவே அவர் விடுதலை செய்யப்படுகிறார்” என்று உத்தரவிட்டார்.

கடந்த 18 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் விடுதலை ஆகி இருப்பது சல்மான்கானுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே சிங்காரா இன மானை வேட்டையாடியதாக சல்மான்கான் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ராஜஸ்தான் ஐகோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. அவற்றில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டு விட்டார்.

தற்போது 3-வதாக ஆயுதம் வைத்திருந்த வழக்கில் அவர் விடுதலையாகி உள்ளார். அவர் மீது 2 கலைமான்களை வேட்டையாடி ஒரு வழக்கு மட்டுமே நிலுவையில் உள்ளது. 

மேலும் செய்திகள்