பிரதமர் வீடு முன்பாக தர்ணாவில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் கைது

பிரதமர் மோடி தன்னை சந்திக்க மறுத்ததால் அவருடைய வீடு முன்பாக தர்ணா போராட்டம் நடத்திய டாக்டர் அன்பு மணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.

Update: 2017-01-19 21:32 GMT
புதுடெல்லி,

பிரதமர் மோடி தன்னை சந்திக்க மறுத்ததால் அவருடைய வீடு முன்பாக தர்ணா போராட்டம் நடத்திய டாக்டர் அன்பு மணி ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.

சந்திக்க மறுப்பு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவசர சட்டம் பிறப்பிக்கக்கோரி தமிழகத்தில், அனைத்து கட்சியினரும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. நேற்று டெல்லியில் லோக் கல்யாண் மார்க் சாலையில் அமைந்துள்ள பிரதமரின் வீட்டுக்கு முன்னாள் மத்திய இணை மந்திரி ஏ.கே.மூர்த்தியுடன் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு கேட்டார். ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தரையில் அமர்ந்து தர்ணா

இதனால் ஆவேசம் அடைந்த அன்புமணி பிரதமர் மோடி வீட்டு முன்பு தரையில் அமர்ந்து ‘தர்ணா’ போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் ஏ.கே.மூர்த்தியும் அமர்ந்து கொண்டார். அவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பிரதமரை சந்திக்க வாய்ப்பு கேட்டும் கோஷமிட்டனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எழுதப்பட்ட சிறிய அட்டைகளையும் உயர்த்திப் பிடித்து கோஷம் எழுப்பினர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத பிரதமர் வீட்டு பாதுகாவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே துப்பாக்கி சகிதமாக ஓடிவந்து அன்புமணி ராமதாசை அங்கிருந்து எழுந்து செல்லுமாறு கூறினர். பின்னர் வலுக்கட்டாயமாக அங்கிருந்து எழச்செய்தனர்.

இருவரும் கைது

அதன்பிறகும் போக மறுத்த அன்புமணி ராமதாஸ் மற்றும் ஏ.கே.மூர்த்தி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரும் அந்த வழியாக பாதுகாப்பு படை வீரர்களை ஏற்றி வந்த அரசு பஸ்சில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள துக்ளக் ரோடு போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பிற்பகலில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்.

பிரதமர் வீட்டு முன்பாக நடந்த இந்த சம்பவம் டெல்லியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

முன்னதாக அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

அதிகாரம் இல்லை

ஜல்லிக்கட்டை தடை செய்வதற்கு யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை. பிரச்சினை இருந்தால் அதை தீர்த்துவிட்டு ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும்.

உதாரணத்துக்கு விநாயகர் சதுர்த்தி விழாவை சொல்லலாம். பிளாஸ்டிக் மற்றும் ரசாயன கலவைகளால் செய்யப்படும் சிலைகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. இதை காரணம் காட்டி விநாயகர் சதுர்த்தியை தடை செய்வார்களா? களிமண்ணால் ஆன சிலைகளை செய்யுங்கள் என்று அறிவுறுத்துவார்கள்.

அதைப்போல ஜல்லிக்கட்டுக்கும் தேவையான நிபந்தனைகளை விதியுங்கள். தடை காரணமாக இளைஞர்கள் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த போராட்டம் அடுத்தக்கட்டத்துக்கு சென்று விடக்கூடாது.

விலகத் தயார்

இளைஞர்களின் கோபம் ஜல்லிக்கட்டுக்கு மட்டுமே கிடையாது. அது கூட்டுக்கோபம். இலங்கை தமிழர்கள், மீனவர்கள், காவிரி, பாலாறு உள்ளிட்ட பல பிரச்சினைகளால் தமிழகம் பாதிக்கப்பட்டு இருப்பதால் கோபத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நான் எம்.பி. பதவியில் இருந்து விலகுவது உதவும் என்றால் அதைச் செய்யவும் தயாராக இருக்கிறேன். பிரதமரை சந்திப்பதற்கு முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் அழைத்து சென்றிருக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்