நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக மறைமுக வரிகளை குறைக்க வேண்டும் ப.சிதம்பரம் பேட்டி

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக மறைமுக வரிகளை குறைக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறினார்.;

Update:2017-02-13 04:30 IST

புதுடெல்லி,

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக மறைமுக வரிகளை குறைக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் கூறினார்.

வளர்ச்சி பாதிப்பு

முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:–

பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் தாக்கம், வருகிற நிதி ஆண்டிலும், அதற்கடுத்த நிதி ஆண்டின் சில மாதங்களிலும் இருக்கும். பட்ஜெட்டில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய அம்சங்கள் இல்லை.

ஒரு சிறு பொறி கூட பெரும் வெடிப்பை ஏற்படுத்தி விடும். அதிருப்தி என்பது கண்ணுக்கு தெரியாததாக இருந்தாலும், அது அமைதியாக கொல்லக்கூடியது.

இலக்கு இல்லாத பட்ஜெட்

இந்த பட்ஜெட், எந்த இலக்கோ, திசையோ இல்லாமல் உள்ளது. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சிக்கு புத்துயிர் ஊட்டும் வாய்ப்பை நிதி மந்திரி அருண் ஜெட்லி தவற விட்டு விட்டார்.

பொருளாதார வளர்ச்சிக்கு மறைமுக வரிகளை குறைப்பதுதான் சிறந்த வழி என்று ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அவர் 4 முதல் 8 சதவீதம் வரை மறைமுக வரிகளை குறைத்து இருக்கலாம். அதுகூட சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமலுக்கு வரும்வரை செய்தால் போதும்.

ஜி.எஸ்.டி. வரி

ஜி.எஸ்.டி. வரி, அக்டோபர் மாதத்துக்கு முன்பு அமலுக்கு வர வாய்ப்பு இல்லை. எனவே, பிப்ரவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் முடிய 8 மாதங்களுக்கு மறைமுக வரிகளை குறைத்தால், பொருளாதாரம் உயரும்.

இப்போது கூட ஒன்றும் கெட்டுப்போகவில்லை. இப்போதும் செய்யலாம்.

மறைமுக வரிகள் குறைக்கப்பட்டால், நுகர்வு அதிகரித்து, உற்பத்தி பெருகும். மறைமுக வரிகள் குறைப்பால், வருவாய் இழப்பு ஏற்படவே செய்யும். ஆனால், அந்த வரி குறைப்பு, உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் நல்ல அறிகுறி ஏற்படுத்தும். அதனால் உற்பத்தி பெருகி, பொருளாதாரம் உயரும்.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

மிகப்பெரிய ஊழல்

பின்னர், மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் பங்கேற்று பேசுகையில் கூறியதாவது:–

பணமதிப்பு நீக்க நடவடிக்கை, கடந்த ஆண்டின் மிகப்பெரிய ஊழல். இதனால், நடப்பு நிதி ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.5 சதவீதம்தான் இருக்கும். இது ஏற்கனவே கணிக்கப்பட்டதை விட ஒரு சதவீதம் குறைவாகும்.

இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும். யாரோ தவறான புள்ளி விவரங்களை கொடுத்து, பணமதிப்பு நீக்க நடவடிக்கையை மோடி அறிவிக்க செய்து விட்டனர். இதனால் ஏற்பட்ட இழப்பு, ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி ஆகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்