உத்தரபிரதேசம் 2-ம் கட்ட தேர்தலில் 65.5 சதவீத வாக்குப்பதிவு

உத்தரபிரதேச சட்டசபைக்கு நடந்த 2-ம் கட்ட தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவானது.

Update: 2017-02-15 22:30 GMT
லக்னோ,

உத்தரபிரதேச சட்டசபைக்கு நடந்த 2-ம் கட்ட தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவானது. இதைப்போல உத்தரகாண்ட் மாநில சட்டசபை தேர்தலில் 68 சதவீத ஓட்டுக்கள் பதிவானது.

721 வேட்பாளர்கள்

403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் முதற்கட்டமாக 73 தொகுதிகளுக்கு கடந்த 11-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக ரோகில்கண்ட் மற்றும் டரை பிராந்தியங்களை சேர்ந்த 11 மாவட்டங்களுக்கு உட்பட்ட 67 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது.

இங்கு பா.ஜனதா, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி-காங்கிரஸ் கூட்டணி, ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் சுயேச்சைகள் என 721 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மாநில மந்திரி முகமது ஆசம்கான் (ராம்பூர் தொகுதி), அவரது மகன் அப்துல்லா (ஸ்வார்), பா.ஜனதா சட்டசபைக்குழு தலைவரும், 7 முறை எம்.எல்.ஏ.வுமான சுரேஷ் குமார் கன்னா (சதர்), காங்கிரஸ் தலைவர் சைப் அலி நக்வி (பலியா) ஆகியோர் இந்த 2-ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் முக்கியமானவர்கள் ஆவர்.

விறுவிறுப்பான வாக்குப்பதிவு

இங்கு நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மின்னணு வாக்குப்பதிவு எந்திர கோளாறு காரணமாக சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தாமதமானது. காலையில் மந்தமாக தொடங்கிய வாக்குப்பதிவு போகப்போக சூடுபிடித்தது. பல இடங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றியதை காண முடிந்தது.

இதனால் அனைத்து தொகுதிகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு காணப்பட்டது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றபோது மொத்தம் 65.5 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

உத்தரகாண்ட்

70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சமோலி மாவட்டத்துக்கு உட்பட்ட கர்ணபிரயாக் தொகுதியில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் வேட்பாளர் குல்தீப் சிங் கன்வாசி கடந்த 12-ந்தேதி நடந்த விபத்தில் உயிரிழந்ததால், இந்த தொகுதிக்கான தேர்தல் அடுத்த மாதம் (மார்ச்) 9-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

எனவே மீதமுள்ள 69 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடத்தப்பட்டது. இங்கு பல்வேறு கட்சிகளை சேர்ந்த 628 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இங்கு காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவி வரும் நிலையில், ஏராளமான சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர்.

இங்கு நேற்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் அலை அலையாக ஆர்வத்துடன் வந்து வாக்களித்து சென்றனர். மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவுற்ற நிலையில், மாநிலம் முழுவதும் 68 சதவீதம் ஓட்டுப்பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. 

மேலும் செய்திகள்