ரெயில் குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஐ.எஸ். பயங்கரவாதி லக்னோவில் சுட்டுக்கொலை

மத்திய பிரதேசத்தில் ரெயிலில் குண்டு வெடித்ததில் தொடர்புடைய ஐ.எஸ். பயங்கரவாதியை உத்தரபிரதேச போலீசார் துப்பாக்கி சண்டையில் சுட்டுக் கொன்றனர்.

Update: 2017-03-08 03:38 GMT
லக்னோ, 

குண்டுவெடிப்பு 

மத்திய பிரதேச மாநிலம், ஜாப்தி ரெயில் நிலையம் அருகே போபால்-உஜ்ஜைனி பயணிகள் ரெயில் சென்றபோது ரெயிலின் பொதுப்பெட்டியில் நேற்று காலை பலத்த சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதில் ரெயில்பெட்டியின் கூரை வெடித்து சிதறியது.

இந்த குண்டுவெடிப்பில் 12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. குண்டுவெடிப்பு நடந்த இடத்துக்கு வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்று அந்த பெட்டியை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கேட்பாரின்றி ஒரு சூட்கேஸ் கிடந்தது. அதை திறந்து பார்த்தபோது, அதில் சிறிய அளவிலான வெடிகுண்டுகள் எடுத்து வந்ததற்கான தடயம் சிக்கியது.

3 பேர் கைது 

இதையடுத்து, புலனாய்வு துறையினரின் உதவியுடன் மத்திய பிரதேச மாநில போலீசார் ரெயிலில் குண்டு வைத்தவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படுகிற ஒருவர் உத்தரபிரதேச மாநிலம், கான்பூரில் கைது செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய மற்றொருவர், ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி என சந்தேகிக்கப்படுகிற முகமது சைபுல் என தெரிய வந்துள்ளது.

அவர், லக்னோ நகரில் தாக்குர் கஞ்ச் பகுதியில் ஹாஜி காலனியில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக பயங்கரவாத தடுப்பு படை போலீஸ் கமாண்டோக்களுக்கு மத்திய புலனாய்வு முகமையிடம் இருந்து ரகசிய தகவல் கிடைத்தது.

துப்பாக்கிச்சண்டை 

 அங்கு பிற்பகல் 3.30 மணிக்கு பயங்கரவாத தடுப்பு போலீஸ் கமாண்டோக்கள் சுமார் 30 பேர் விரைந்து சென்று, பயங்கரவாதி தங்கி இருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் வாழும் மக்களை போலீசார் வெளியேற்றினர்.

பயங்கரவாதி சைபுல் பதுங்கியுள்ள அந்த வீட்டின் கதவை போலீஸ் கமாண்டோக்கள் தட்டினர். ஆனால் கதவைத் தட்டுவது போலீஸ் படைதான் என அவர் மோப்பம் பிடித்துக்கொண்டு, அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தார். சரண் அடைய மறுத்து போலீசாருடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்ட ஐ.எஸ். பயங்கரவாதி சைபுல் பல மணி நேர போராட்டத்துக்கு பின்பு போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்ட வீட்டில் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்