‘மதத்திற்காக உயிர் நீக்கப் போகிறேன்’ சகோதரனிடம் பேசிய பயங்கரவாதி முகமது சைபுல்

லக்னோ என்கவுண்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதி முகமது சைபுல் சகோதரனிடம் பேசியபோது ‘மதத்திற்காக உயிர் நீக்கப் போகிறேன்’ என கூறிஉள்ளான்.

Update: 2017-03-08 10:13 GMT
லக்னோ,

மத்திய பிரதேச மாநிலம், ஜாப்தி ரெயில் நிலையம் அருகே போபால்-உஜ்ஜைனி பயணிகள் ரெயில் சென்றபோது ரெயிலின் பொதுப்பெட்டியில் நேற்று காலை பலத்த சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதில் ரெயில்பெட்டியின் கூரை வெடித்து சிதறியது. குண்டு வெடிப்பில் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. 

இது தொடர்பாக மத்திய பிரதேச மற்றும் உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு மத்திய உளவுப்பிரிவு உதவியுடன் விசாரணையை முன்நோக்கி சென்றது. விசாரணையின் போது ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி என சந்தேகிக்கப்படுகிற முகமது சைபுல் என தெரிய வந்தது. லக்னோ நகரில் தாக்குர் கஞ்ச் பகுதியில் ஹாஜி காலனியில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக பயங்கரவாத தடுப்பு படை போலீஸ் கமாண்டோக்களுக்கு மத்திய புலனாய்வு முகமையிடம் இருந்து ரகசிய தகவல் கிடைத்தது. 

நேற்று இரவு உத்தரபிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு படை நடத்திய அதிரடி தாக்குதலில் பயங்கரவாதி முகமது சைபுல் கொல்லப்பட்டான்.  முதலில் சரண் அடையுமாறு முகமது சைபுல்லிடம் போலீஸ் கோரிக்கை விடுத்தது. ஆனால் அதனை மறுத்துவிட்ட சைபுல் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். எப்படியாவது உயிருடன் பிடிக்க வேண்டும் என்று சைபுல் இருந்த வீட்டை நோக்கி பாதுகாப்பு படை கண்ணீர் புகை குண்டுகள், மிளகாய் குண்டுகளை வீசியது. ஆனால் சரண் அடைய மறுத்து முகமது சைபுல் துப்பாக்கி சூட்டை தொடர்ந்தான். இறுதியில் போலீஸ் கொடுத்த பதிலடியில் முகமது சைபுல் மரணம் அடைந்தான். 

இதற்கிடையே முகமது சைபுல் சகோதரர் என்கவுண்டர் நடந்தபோது அவரிடம் பேசிஉள்ளார். சரண் அடைந்துவிடு என அவருடைய சகோதரர் கேட்டுக் கொண்டு உள்ளார். ஆனால் முகமது சைபுல், “சரண் அடைய மாட்டேன். நான் மதத்திற்காக உயிர் நீக்க போகிறேன்,” என்று கூறிஉள்ளான் என தகவல்கள் வெளியாகி உள்ளது. 3 மணிக்கு உத்தரபிரதேச மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு முகமது சைபுல்லை சுற்றி வளைத்தது. 5.30 மணியளவில் அவருடைய சகோதரர் பேசி கோரிக்கை விடுத்து உள்ளார், ஆனால் பலனளிக்கவில்லை. 

மேலும் செய்திகள்