கையில் துடைப்பம் எடுத்து அலுவலகம் மற்றும் நடைபாதையை சுத்தம் செய்த மந்திரி

உத்தரபிரதேசத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத், தூய்மை இந்தியா திட்டத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

Update: 2017-03-23 21:00 GMT

லக்னோ

உத்தரபிரதேசத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத், தூய்மை இந்தியா திட்டத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். மாநிலத்தின் தூய்மையை பேண உறுதி ஏற்குமாறு மந்திரிகள் மற்றும் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ள அவர், அரசு கட்டிடங்கள் வளாகங்களை தூய்மையாக வைத்திருக்க பல்வேறு அதிரடி உத்தரவுகளையும் பிறப்பித்து உள்ளார்.

முதல்–மந்திரியின் இந்த உத்தரவுகளை தொடர்ந்து மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை (தனிப்பொறுப்பு) மந்திரி உபேந்திர திவாரி நேற்று தூய்மைப்பணியில் நேரடியாக களத்தில் இறங்கினார். காலையில் தனது அலுவலகத்துக்கு சென்ற அவர் ஒரு துடைப்பத்தை எடுத்து தனது அறையை சுத்தம் செய்தார்.

பின்னர் அலுவலகத்தில் இருந்து சட்டமன்றத்துக்கு செல்லும் நடைபாதையையும் அவர் தூய்மைப்படுத்தினார். மந்திரியின் இந்த தூய்மைப்பணிகளை அலுவலக ஊழியர்கள் சுற்றி நின்று ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர். இது தொடர்பான வீடியோ பதிவு நேற்று சமூக வலைத்தளங்களில் பரவி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

மேலும் செய்திகள்