திராவகம் குடிக்க வைக்கப்பட்ட பெண்ணுடன் ‘செல்பி’ படம் 3 பெண் போலீஸ் மீது விசாரணை

அலகாபாத்–லக்னோ கங்கா கோமதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் 45 வயதான ஒரு பெண்ணை நேற்று முன்தினம் 2 பேர் வலுக்கட்டாயமாக திராவகத்தை குடிக்க வைத்தனர்.

Update: 2017-03-24 20:30 GMT

லக்னோ

நடைபெற்று முடிந்த உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தலில், பெண்களுக்கு எதிராக பெருகிவரும் குற்றச்சம்பவங்களுக்கு முடிவு கட்டுவோம் என்று பா.ஜனதா வாக்குறுதி அளித்தது. அது தேர்தலில் அந்தக் கட்சிக்கு கைகொடுத்தது. அமோக வெற்றி பெற்று ஆட்சியையும் பிடித்தது. இப்போது தேர்தல் வாக்குறுதியின்படி செயல்படவும் தொடங்கி விட்டது என்பதற்கு உதாரணமாக அங்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அங்கு அலகாபாத்–லக்னோ கங்கா கோமதி எக்ஸ்பிரஸ் ரெயிலில் 45 வயதான ஒரு பெண்ணை நேற்று முன்தினம் 2 பேர் வலுக்கட்டாயமாக திராவகத்தை குடிக்க வைத்தனர்.

இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், சார்பாக் ரெயில் நிலையத்தில் இறங்கி, ரெயில்வே போலீசிடம் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து அவர் லக்னோ மன்னர் ஜார்ஜ் மருத்துவ பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவருடன் 3 பெண் போலீசார் படுக்கையில் ஒன்றாக அமர்ந்து ‘செல்பி’ படம் எடுத்து, அது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இது முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத் கவனத்துக்கும் சென்றது. உடனே நடவடிக்கையில் இறங்கிய அவர், ஆஸ்பத்திரிக்கு சென்று அந்தப் பெண்ணைப் பார்த்து ஆறுதல் கூறினார். அவருக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்குவதாக அறிவித்தார். இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் பொறுப்பற்ற விதத்தில் ‘செல்பி’ படம் எடுத்து வெளியிட்ட பெண் போலீஸ் மீது விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்