அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) அமோக வெற்றி பெறும்

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பணபலத்தால் வெற்றி பெற்றுவிடலாம் என நினைப்பதாக தேவேகவுடா குற்றம் சாட்டி உள்ளார்.

Update: 2017-04-09 23:03 GMT

சிக்கமகளூரு

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி பணபலத்தால் வெற்றி பெற்றுவிடலாம் என நினைப்பதாக ஜனதாள (எஸ்) கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா குற்றம் சாட்டி உள்ளார்.

திறப்பு விழா

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தாலுகா பீருரில் இருந்து லிங்கதஹள்ளி வரை உள்ள 14 கிலோ மீட்டர் சாலையின் சீரமைப்பு பணிகள் நடந்தன. பணிகள் முடிந்து நேற்று முன்தினம் போக்குவரத்து சேவைக்கு சாலையின் திறப்பு விழா நடந்தது. விழாவில் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா சாலையை திறந்து வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி...

ஜனதா தளம் (எஸ்) கட்சியை அனைத்து பகுதியிலும் பலம் மிக்க கட்சியாக மாற்ற நானும், முன்னாள் முதல்–மந்திரியுமான குமாரசாமியும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறோம். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஜனதா தளம்(எஸ்) கட்சி அமோக வெற்றிபெற்று, எங்கள் தலைமையிலான அரசு அமையும். அப்போது விவசாயிகளின் நலன் காக்க அனைத்து விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் கர்நாடக மாநிலம் முழுவதும் அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்.

பணபலத்தால் வெற்றி பெற்றுவிடலாம்...

கர்நாடக மாநிலத்தில் பல்வேறு பிரச்சினைகள் நிலவி வருகிறது. குறிப்பாக மத மோதல் சம்பவங்கள் ஆங்காங்கே தலை தூக்கி வருகிறது. இந்த அரசு அதையெல்லாம் கண்டுகொண்டதாக தெரியவில்லை. குறிப்பாக இந்த அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது. இதையெல்லாம் சரி செய்ய சித்தராமையா தவறிவிட்டார்.

மேலும் காங்கிரஸ் அரசு அடுத்த ஆண்டு நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் பணபலத்தை கொண்டு வெற்றி பெற்றுவிடலாம் என நம்புகிறது. ஆனால் சித்தராமையா தனது தலைமையிலான அரசு செய்த தவறுகளுக்கு மக்களிடம் பதில் அளித்தே ஆக வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்