ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து: பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை விமர்சித்த ப.சிதம்பரம்

ஆர்.கே.நகர் தேர்தல் பணப்பட்டுவாடா காரணமாக ரத்து செய்யப்பட்டதை அடுத்து பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ப.சிதம்பரம் விமர்சித்து உள்ளார்.

Update: 2017-04-10 05:21 GMT
புதுடெல்லி,

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வருகிற புதன்கிழமை இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. இதற்கான பிரசாரம் இன்றுடன் (திங்கட்கிழமை) முடிவடைவதாக இருந்தது. இந்தநிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் வரலாறு காணாத அளவுக்கு பண பட்டுவாடா நடந்தது அம்பலமானது. 

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகள், அலுவலகம், உறவினர் வீடு என மொத்தம் 35 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்தசோதனையில், ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்கு ஆதாரமாக முக்கிய ஆவணங்களும் மற்றும் கட்டுக்கட்டாக ரொக்க பணமும் சிக்கின. ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக இதுவரை ரூ.89 கோடி வரை வினியோகம் செய்திருப்பதற்கான ஆதாரங்கள் சிக்கியதாக தகவல் வெளியானது. 

இந்த ஆதாரங்களை எல்லாம் வருமான வரித்துறையினரிடம் இருந்து பெற்ற தேர்தல் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது பற்றி ஆலோசனை நடத்திய தேர்தல் கமிஷன், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை நேற்று அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில் முன்னாள் நிதிமந்திரியும், காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் டுவிட்டரில் வெளியிட்டு உள்ள செய்தியில், “உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையானது கருப்பு பணத்தை முடிவுக்கு கொண்டு வந்து உள்ளது என்று நம்மிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆ.கே.நகரில் பட்டுவாடா செய்யப்பட்டது நல்ல பணமா?” என கேள்வி எழுப்பி உள்ளார். கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக நாட்டில் உயர்மதிப்புடைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி நவம்பர் 8-ம் தேதி அறிவித்தார், இந்நகர்வில் சாதகமான பதில்களும் கிடைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் ஆர்.கே.நகரில் கோடிக்கணக்கில் பணம் நடமாடி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்