காஷ்மீரில், ராணுவ ஜீப்பில் இளைஞர், மனித கேடயமாக பயன்படுத்தப்பட்டாரா?

காஷ்மீரில், கல்வீச்சில் இருந்து படை வீரர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள ராணுவ ஜீப்பில் இளைஞரை மனித கேடயமாக பயன்படுத்தியதாக வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரவியது. இது குறித்து விசாரணை நடத்த ராணுவம் உத்தரவிட்டு உள்ளது.

Update: 2017-04-14 23:30 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடைத்தேர்தல் நடந்தது. அப்போது பத்காம் மாவட்டத்தின் பீர்வான் பகுதியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு எதிராக இளைஞர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த படை வீரர்கள் கல்வீச்சில் ஈடுபட்ட இளைஞர் ஒருவரை பிடித்ததாகவும், தங்கள் மீது கற்களை வீசித் தாக்காமல் தற்காத்துக் கொள்ள அந்த இளைஞரை ஜீப்பின் முன்பகுதியில் கயிற்றால் கட்டி மனித கேடயமாக பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அப்போது, கல்வீச்சில் ஈடுபடுபவர்களுக்கு இந்த கதிதான் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்த வீடியோ காட்சி நேற்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.

கண்டனம்

இதற்கு காஷ்மீர் முன்னாள் முதல்–மந்திரி உமர் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘‘தங்கள் மீது கற்கள் படக்கூடாது என்பதற்காகத்தான் அந்த இளைஞர் ஜீப்பின் முன்பக்கமாக கயிற்றில் கட்டப்பட்டு கொண்டு செல்லப்பட்டாரா?. இது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. படையினரின் இந்த செயல் மூர்க்கத்தனமானது. இது எதிர் விளைவை ஏற்படுத்தாது என்பது என்ன நிச்சயம்? கல்வீச்சில் ஈடுபடுபவர்களின் கதி இதுதான் என்பதை வெளிப்படையாக கூறும் இந்த சம்பவம் பற்றி உடனடியாக விசாரணை நடத்தப்படவேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

விசாரணைக்கு உத்தரவு

இதுபற்றி ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘இந்த வீடியோ காட்சியின் உண்மை தன்மை பற்றி சரிபார்க்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ராணுவம் விசாரணைக்கும் உத்தரவிட்டு உள்ளது’’ என்றார்.

மேலும் செய்திகள்