அரசு நிதியை மோசடி செய்த 718 தொண்டு நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் வைப்பு

அரசு நிதியை மோசடி செய்த 718 தொண்டு நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளன. 15 நிறுவனங்கள் அரசின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டன.

Update: 2017-04-26 23:00 GMT
புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் மனோகர்லால் சர்மா என்பவர் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், அரசு வழங்கும் நிதியை பல தொண்டு நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தி வருகின்றன. இவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர், நீதிபதிகள் சஞ்சய் கி‌ஷன் கவுல், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு மோசடியில் ஈடுபடும் தொண்டு நிறுவனங்கள் குறித்த பட்டியலை மத்திய அரசின் ‘கபார்ட்’ என்னும் மக்களுக்கான நடவடிக்கை மற்றும் ஊரக தொழில்நுட்ப கவுன்சில் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.

இதையடுத்து கபார்ட் கவுன்சில் சுப்ரீம் கோர்ட்டில் அரசின் நிதியை தவறாக பயன்படுத்தும் பட்டியல் குறித்த பிரமாண பத்திரத்தை நேற்று தாக்கல் செய்தது. அதில், 718 தொண்டு நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளன. 15 நிறுவனங்கள் அரசின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டன. 159 நிறுவனங்களின் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று கூறப்பட்டு இருந்தது. எனினும், சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனங்கள் எவை என்பதை சுப்ரீம் கோர்ட்டில் கபார்ட் தெரிவிக்கவில்லை.

மேலும் செய்திகள்