ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டதாக சி.பி.ஐ. அதிகாரி மீது வழக்கு

டெல்லியில் ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டதாக சி.பி.ஐ. அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. புகாரில் சிக்கி உள்ளவர், சிறந்த அதிகாரி விருது பெற்றவர் ஆவார்.

Update: 2017-04-26 22:32 GMT
புதுடெல்லி,


சி.பி.ஐ.யின் மும்பை பிரிவில் துணை சூப்பிரண்டாக இருப்பவர் நீரஜ் அகர்வால். இவரது பணியை பாராட்டி, கடந்த ஆண்டு சிறந்த அதிகாரி விருதை ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி வழங்கி கவுரவித்தார்.

மும்பையில உள்ள பரோடா வங்கியில் காசாளராக வேலை பார்த்து வந்தவர் பிரதீப் ஷா. இவர் மீது சி.பி.ஐ.யில் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. அதில் இருந்து தப்பிப்பதற்காக நீரஜ் அகர்வாலை பிரதீப் ஷா அணுகினார். ரூ.50 லட்சம் தனக்கு லஞ்சமாக கொடுத்தால், வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்து விடுவதாக நீரஜ் அகர்வால் கூறியதாக தெரிகிறது.

நீண்டநேர பேரத்திற்கு பின்னர், ரூ.35 லட்சத்துக்கு சி.பி.ஐ. அதிகாரி பணிந்தார். இதற்கு திவாரி என்பவர் இடைத்தரகராக செயல்பட்டார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத வங்கி அதிகாரி இதுகுறித்து சி.பி.ஐ.யில் புகார் செய்தார்.

லஞ்ச வழக்கு

இதனையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் வங்கி அதிகாரி பிரதீப் ஷாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது, இருவரும் நடத்திய செல்போன் உரையாடலை பிரதீப் ஷா சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்தார். மேலும், அதிகாரிகள் முன்னிலையிலேயே பிரதீப் ஷா, நீரஜ் அகர்வால் மற்றும் திவாரிக்கு போன் செய்து பேசினார். அப்போது முதல்கட்டமாக 4 லட்சம் பணத்தை சி.பி.ஐ. அதிகாரி நீரஜ் அகர்வால் லஞ்சமாக கேட்டார்.

இந்த உரையாடலை சி.பி.ஐ. அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். இதனையடுத்து துணை சூப்பிரண்டு நீரஜ் அகர்வால் மீது ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டதாக சி.பி.ஐ. சார்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்