விசாரணைக்காக டிடிவி தினகரனுடன் சென்னை புறப்பட்டது டெல்லி குற்றப்பிரிவு போலீஸ்

விசாரணைக்காக டிடிவி தினகரனுடன் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் சென்னை புறப்பட்டனர். தினகரனுடன் அவரது நண்பர் மல்லிகார்ஜுனும் அழைத்து வரப்படுகிறார்.

Update: 2017-04-27 03:36 GMT
சென்னை,

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.இந்த வழக்கில் முதலில் கடந்த 16–ந் தேதி டெல்லியில் சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 30 லட்சத்தையும், 2 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர். சுகேஷ் சந்திரசேகரிடம் விசாரணை நடத்தியபோதுதான், அவர் மூலம் டி.டி.வி.தினகரன் தேர்தல் கமி‌ஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து, டெல்லி போலீசார் டி.டி.வி.தினகரனை டெல்லிக்கு வரவழைத்து கடந்த சனிக்கிழமை முதல் 4 நாட்கள் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினார்கள். இதேபோல் அவரது உதவியாளர் ஜனார்த்தனன், நண்பர் மல்லிகார்ஜூனா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. 4–வது நாள் விசாரணை நடந்து முடிந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு டி.டி.வி.தினகரனை போலீசார் கைது செய்தனர். இதன்பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டிடிவி தினகரனை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி போலீஸுக்கு அனுமதி கிடைத்தது.

இந்த நிலையில்,  விசாரணைக்காக டிடிவி தினகரனுடன்  டெல்லி போலீஸ், சென்னைக்கு புறப்பட்டுள்ளது. தினகரன் நண்பர் மல்லிகார்ஜூனையும் டெல்லி போலீஸ் விசாரணைக்காக சென்னை அழைத்து வருகிறது. இதேபோல் கொச்சி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கும் இருவரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தவும் திட்டமிட்டு உள்ளனர். ரூ.10 கோடி பணம் எங்கிருந்து, யார்–யார் கைமாறி, எந்த வழியாக டெல்லிக்கு அனுப்பப்பட்டது? என்பதை நேரடியாக அறிந்து கொள்ளும் விதமாக போலீசார் மேற்கண்ட இடங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று விசாரிக்க இருக்கிறார்கள். மேலும் சென்னையில் உள்ள டி.டி.வி.தினகரனின் இல்லத்தில் சோதனை நடத்தவும் கோர்ட்டின் அனுமதியை போலீசார் பெற்று உள்ளனர். இதேபோல் மல்லிகார்ஜூனாவின் வீட்டில் சோதனை போடவும் அனுமதி பெற்று இருக்கிறார்கள்.

மேலும் செய்திகள்