நான் ஒரு ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டு என பாகிஸ்தான் பயணி கூறியதால் விமான அதிகாரிகள் அதிர்ச்சி

நான் ஒரு ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டு என பாகிஸ்தான் பயணி கூறியதால் இந்தியா விமான அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Update: 2017-04-28 15:20 GMT
புதுடெல்லி,

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு  துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் இருந்து பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பயணி இறங்கினார்.

அவர் நேராக விமான நிலையத்தில் ‘ஹெல்ப் டெஸ்க்’ (உதவி வேண்டுமா?) கவுன்டரில் பணியில் இருந்த பெண்ணை நாடி, ‘‘ நான் ஒரு ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டு (ஐ.எஸ்.ஐ. என்பது பாகிஸ்தான் உளவு அமைப்பு). ஐ.எஸ்.ஐ. பற்றிய தகவல்களை பகிர விரும்புகிறேன்’’ என கூறினார்.

அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் ஊழியர், உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் அவரைப் பிடித்து சென்றனர். அவர் முகமது அகமது ஷேக் முகமது ரபிக் என்ற பெயரில் பாகிஸ்தான் பாஸ்போர்ட் வைத்துள்ளார்.

அவரிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில், ‘‘ நான் ஐ.எஸ்.ஐ.யில் இருந்து விலகிவிட்டு, இந்தியாவில் தங்கி இருக்க விரும்புகிறேன்’’ என கூறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 தொடர்ந்து அவரை ஒரு ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கின்றனர். அவர் உண்மையிலேயே ஐ.எஸ்.ஐ. ஏஜெண்டுதானா என்பதும் சோதிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்