அரசு நலத்திட்ட சலுகைகளைப் பெற ஆதார் இணைப்புக்கான தேதி நீட்டிக்கப்படாது

அரசு நலத்திட்ட சலுகைகளைப் பெற ஆதார் எண்களை இணைப்பதற்கான தேதி நீட்டிக்கப்படாது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டமாக கூறியது.

Update: 2017-05-19 23:30 GMT

புதுடெல்லி

அரசு நலத்திட்ட சலுகைகளைப் பெற ஆதார் எண்களை இணைப்பதற்கான தேதி நீட்டிக்கப்படாது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டமாக கூறியது.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள்

பல்வேறு சமூக நலத்திட்டங்களின் பலன்களை அடைவதற்கு ஆதார் அடையாள எண்ணை இணைப்பது கட்டாயம் என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்துள்ளது.

ஆனால் ஆதார், அரசியல் சாசனப்படி செல்லுபடியாகத்தக்கதா என்ற கேள்வியை எழுப்பி பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டு, அவை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், மத்திய அரசின் நிலைப்பாட்டில் இருந்து நிவாரணம் கேட்டும் பல்வேறு தரப்பினரும் வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர். அந்த வகையில் மேலும் ஒரு வழக்கை தாக்கல் செய்து, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னிலையில் மூத்த வக்கீல் சியாம் திவான் நேற்று முறையிட்டார்.

அட்டார்னி ஜெனரல் கருத்து

அப்போது மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராகி அரசு தரப்பு கருத்தை வெளிப்படுத்தினார். அப்போது அவர், ‘‘நாட்டில் 115 கோடி பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டு விட்டன. நலத்திட்டங்கள் தவறான நபர்களுக்கு போய்ச்சேரக்கூடாது என்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம்’’ என குறிப்பிட்டார்.

இந்த வழக்கை கோடை விடுமுறை கால அமர்வில் விசாரிக்க பட்டியலிடலாமா என்பது குறித்து நீதிபதிகள் பரிசீலித்தனர். அப்போது வழக்குதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சியாம் திவான், ‘‘இது அவசர பிரச்சினை. ஜூன் 30–ந் தேதிக்குள் இதை விசாரிக்காவிட்டால், அடுத்த வழி அரசு நலத்திட்டங்களுக்கு ஆதாரை இணைப்பதற்கான காலக்கெடுவை நீட்டிப்பதுதான்’’ என கூறினார்.

‘நீட்டிக்கும் பேச்சுக்கே இடம் இல்லை’

ஆனால் இதை அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி எதிர்த்தார்.

அவர், ‘‘ஆதார் காலக்கெடுவை நீட்டிக்கும் பேச்சுக்கே இடம் இல்லை. ஜூன் 30–ந் தேதி வரையில் ஆதார் அட்டைக்கு பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்வதற்கான சேர்க்கை சீட்டுகளை அரசு சலுகை திட்டங்களுக்கு பயன்படுத்தலாம்’’ என்று கூறினார்.

அடுத்த மாதம் விசாரணை

இதையடுத்து இந்த வழக்கு மீதான விசாரணையை அடுத்த மாதம் 27–ந் தேதிக்கு ஒத்தி வைத்தனர். அந்த நாளில், நிவாரணம் கேட்டு தாக்கலான வழக்குகள் அனைத்தையும் ஒருசேர விசாரிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மேலும் செய்திகள்