நாடு முழுவதும் புனித ரமலான் பண்டிகை கொண்டாட்டம்

நாடு முழுவதும் புனித ரமலான் பண்டிகை கொண்டாட்டப்பட்டு வருகிறது. சிறப்பு தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளனர்.

Update: 2017-06-26 03:39 GMT
புதுடெல்லி,

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் உற்சாகமாக உலகம் முழுவதுமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரமலான் பண்டிகை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் களை கட்டியுள்ளது. தலைநகர் புதுடெல்லி, மும்பை, போபால் உள்ளிட்ட இடங்களில் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது. 

சிறப்பு தொழுகைகளில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். இந்த தொழுகைக்குப் பின்னர் இஸ்லாமிய மக்கள் ஒருவரை ஒருவர் தழுவி வாழ்த்துகளை தெரிவித்தனர். புத்தாடைகள் அணிந்தும் இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியையும் அவர்கள் வெளிப்படுத்தினர். ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதனிடையே ரமலான் பண்டிக்கைக்கான முதல் பிறை நேற்று தெரிந்ததால் இன்று தமிழகத்தில் ரமலான் பண்டிகைக் கொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூப் சென்னையில் அறிவித்தார். இதையடுத்து இன்று தமிழகம் முழுவதும் ரமலான் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. 

முன்னதாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் மு.க.ஸ்டாலின், ஓ பன்னீர் செல்வம், ஜி.கே.வாசன், திருமாவளவன், ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்