பணியிட மாறுதலுக்காக அரசியல் செல்வாக்கை நாடக்கூடாது: நேரடி வரிகள் வாரியம் எச்சரிக்கை

பணியிட மாறுதலுக்காக அரசியல் செல்வாக்கை நாடக்கூடாது என வருமான வரி இலாகாவினருக்கு, நேரடி வரிகள் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Update: 2017-07-24 02:44 GMT
புதுடெல்லி, 

வருமான வரி இலாகாவின் தலைமை அமைப்பான மத்திய நேரடி வரிகள் வாரியம் அண்மையில் 300 அதிகாரிகளை பணியிட மாறுதல் செய்தும், பதவி உயர்வு அளித்தும் உத்தரவிட்டது. இந்த நிலையில் வருமான வரி இலாகாவை சேர்ந்த அதிகாரிகளில் பலர் பணியிட மாறுதல், பதவி உயர்வு பெறுவதற்காக அரசியல் தலைவர்கள் மற்றும் வெளி ஆட்களின் செல்வாக்கை நாடுவதாக மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் உயர் அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தது.

இதையடுத்து வருமான வரி இலாகா அதிகாரிகளுக்கு, மத்திய நேரடி வரிகள் வாரியம் ஒரு உத்தரவை பிறப்பித்தது.

அதில், ‘‘வருமான வரி இலாகாவில் பணியாற்றும் யாரும் பணியிட மாறுதல், பதவி உயர்வுகளுக்காக அரசியல் தலைவர்கள் மற்றும் வெளி ஆட்களின் செல்வாக்கை நாடக்கூடாது. இதை முற்றிலுமாக தவிர்க்கவேண்டும். மீறி இதுபோன்ற செயல்களில் யாராவது ஈடுபடுவது தெரியவந்தால் அவர்கள் மீது பணிகள் சேவை மற்றும் நடத்தை விதிகளின் அடிப்படையில் இலாகா ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்