ஐதராபாத் போதைப்பொருள் வழக்கு: ஐ.டி. நிறுவனங்கள், பள்ளி-கல்லூரிகள் பக்கம் கவனம் திரும்பியது

ஐதராபாத் போதைப்பொருள் வழக்கு விசாரணையானது ஐ.டி. நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பக்கமும் நகர்கிறது.

Update: 2017-07-28 09:59 GMT

ஐதராபாத்,


தெலுங்கு பட உலகைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோருக்கு போதை பொருட்கள் சப்ளை செய்ததாக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கெல்வின், ஐதராபாத்தை சேர்ந்த பியூஸ் ஆகியோரை போலீஸ் கைது செய்தது. இதுதொடர்பான விசாரணையில் பலர் சிக்கி வருகிறார்கள். விசாரணையில் போதைப்பொருள் கும்பலுடன் தெலுங்கு நடிகர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. விசாரணையில் வெளியான பெயர்கள் பட்டியலில் நடிகர்கள் நவ்தீப், தருண், நடிகைகள் சார்மி, முமைத்கான், டைரக்டர் பூரி ஜெகன்னாத் உள்பட திரையுலகை சேர்ந்த 12 பேரின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன. அவர்களிடம் சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை செய்து வருகிறது.

போதைப்பொருள் வழக்கில் தெலுங்கு திரைத்துறையை அடுத்து கலால் துறையின் பார்வையானது ஐ.டி. நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்கள் மீது திரும்பி உள்ளது. 

ஐ.டி. நிறுவனங்களின் ஊழியர்கள், மாணவர்களிடன் பெயரானது போதைப்பொருள் வழக்கில் இடம்பெற்று உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக கலால் துறையானது 13 ஐ.டி. நிறுவனங்கள், 25 பள்ளிகள் மற்றும் அதே எண்ணிக்கையிலான கல்லூரிகளுக்கும் நோட்டீஸ் வழங்கி உள்ளது. இதுதொடர்பாக போதிய ஆவணங்களை சேகரித்ததும் அவர்களை விசாரணைக்கு அழைப்பு விடுப்போம் என கூறிஉள்ளார் தெலுங்கான கலால் துறை மந்திரி டி. பத்மா ராவ். 

அவர் பேசுகையில் ‘தெலுங்கு திரையுலகம் குறிவைக்கப்படவில்லை’ என கூறிஉள்ளார் பத்மா ராவ். 

“தெலுங்கானா அரசு திரையுலகத்திற்கு உதவி செய்து வருகிறது, அவர்களை குறிவைக்கவில்லை. இதுதொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணையானது கிடைக்கப்பெற்ற தகவல்களை கொண்டே,” என்றார். போதைப்பொருள் சப்ளை மற்றும் நுகர்வுக்கு எதிராக ஜூலை-30 தேதி ஓட்டத்தில் கலந்துக் கொள்ள திரையுலகம் தரப்பில் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. போதைப்பொருள் விவகாரத்தில் குற்றவாளிகளை தண்டிக்க திரையுலகம் அரசுக்கு ஆதரவளிக்கிறது. ஐதராபாத்தில் இருந்து போதைப்பொருள் கலாசாரத்தை அழிப்பதில் அரசு உறுதியாக உள்ளது, இவ்விவகாரத்தில் தேவைப்பட்டால் சிறப்பு குழுவையும் அமைப்போம் என கூறிஉள்ளார் பத்மா ராவ்.

மேலும் செய்திகள்