நடிகைக்கு எதிரான கருத்து: கேரள எம்.எல்.ஏ.வுக்கு சபாநாயகர் எச்சரிக்கை

ஜார்ஜ் எம்.எல்.ஏ.வுக்கு சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து உள்ளதுடன், இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

Update: 2017-08-17 20:30 GMT
திருவனந்தபுரம், 

கேரளாவில் பிரபல நடிகை ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் கடத்தி, பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் திலீப் உள்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் கேரளாவின் பூஞ்சார் தொகுதியை சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ.வான ஜார்ஜ், அந்த நடிகையை குறித்து தரக்குறைவான கருத்துகளை வெளியிட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நடிகை இது குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதினார்.

இதைத்தொடர்ந்து ஜார்ஜ் எம்.எல்.ஏ.வுக்கு சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து உள்ளதுடன், இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார். சமுதாயத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் ஒருவர் இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது, குற்றவாளிகளை ஊக்கப்படுத்துவது போல ஆகிவிடும் என அவர் கண்டித்துள்ளார்.

முன்னதாக ஜார்ஜின் கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்த மகளிர் ஆணையம், அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்