தனி மனித ரகசிய காப்பு உரிமை அடிப்படை உரிமையே சுப்ரீம் கோர்ட் உத்தரவு

தனி மனித ரகசிய காப்பு உரிமை அடிப்படை உரிமையே என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து உள்ளது.

Update: 2017-08-24 05:37 GMT

புதுடெல்லி

ஆதார் அடையாள அட்டைக்காக  கைரேகை, கருவிழியை பதிவு செய்ய எதிர்ப்பு  தெரிவித்து  சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினரும் வழக்கு தொடுத்தனர். அதில், ‘அரசியல் சாசனத்தின்படி ஒருவரின் அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமையா?’ என்ற கேள்வி எழுந்தது. இந்த கேள்வி குறித்து விசாரித்து முடிவு செய்வதற்கு தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட்டது. இந்த அமர்வில் நீதிபதிகள் ரோஹிண்டன் பாலி நாரிமன், சஞ்சய் கி‌ஷன் கவுல், அபய் மனோகர் சப்ரே, சந்திரசூட், அப்துல் நசீர், எஸ்.ஏ.பாப்டே, ஆர்.கே.அகர்வால், ஜே.செல்லமேஸ்வர்  என 9 நீதிபதிகள் இடம் பெற்று இருந்தனர்.

இந்த அமர்வின் முன் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மூத்த வக்கீல்கள் அரவிந்த் தட்டார், கபில் சிபல், கோபால் சுப்பிரமணியம், சியாம் திவான், ஆனந்த் குரோவர், சி.ஏ.சுந்தரம், ராகேஷ் திவிவேதி உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். நீதிபதிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர்கள் பதிலும் அளித்தனர்.

இந்த விசாரணையின்போது, கரக் சிங் மற்றும் எம்.பி. சர்மா வழக்குகளில் ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பு ஆராயப்பட்டது.

விசாரணை முடிந்து கடந்த 2–ந் தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அந்த தீர்ப்பு இன்று (வியாழக்கிழமை) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி இன்று  சுப்ரீம் கோர்ட் தனி மனித ரகசிய  காப்பு  உரிமை  அடிப்படை உரிமையே என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பால் ஆதார் பயன்பாட்டு கொள்கையில் மாற்றம் வரலாம் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்