டெல்லியில் 2 பெண்களை ஏரில் பூட்டி விவசாயிகள் ஊர்வலம்

டெல்லியில் தமிழக விவசாயிகள் பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

Update: 2017-08-24 23:00 GMT

புதுடெல்லி,

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெறும் இந்த போராட்டம் நேற்று 40–வது நாளை எட்டியது.

இதையொட்டி போராட்டத்தில் பங்கேற்ற 2 பெண்கள், மாடுகளைப் போல ஏரில் பூட்டப்பட்டனர். அதில் கலப்பையும் இணைக்கப்பட்டு இருந்தது. பின்னர் அந்த பெண்களை, பிரதமர் மோடி போல வேடமணிந்த ஒருவர் சாட்டையால் அடித்துச் செல்வது போல ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலம் வழக்கம்போல கேரள இல்லம் வரை சென்று திரும்பியது.

இதில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 22 பேர் கலந்து கொண்டனர். மேலும், பல்வேறு மாநில விவசாய சங்க பிரதிநிதிகளும், சுப்ரீம்கோர்ட்டு வக்கீல்கள் சிலரும் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டார்.

இது குறித்து அவர் பின்னர் கூறுகையில், ‘தமிழகத்தில் வறட்சியால் கருகிய பயிர்களுக்கு தர வேண்டிய நஷ்டஈடு இதுவரை கிடைக்கவில்லை. தற்கொலை செய்துகொண்ட 400 விவசாயிகளின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. அவர்களின் மனைவியர் பிழைப்புக்கு வழியின்றி தவிக்கிறார்கள். அவர்கள் மாடுகளைப் போல உழைக்க வேண்டியுள்ளது. மத்திய அரசும் அவர்களை மாடுகளாகவே பார்க்கிறது. எனவே அதை உணர்த்தி இந்த போராட்டத்தை நாங்கள் நடத்தினோம்’ என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்