ரெயில்வே உணவில் அளவு மற்றும் விநியோகிப்பவர் விவரங்கள் இடம் பெறவேண்டும்: மத்திய ரெயில்வே மந்திரி

ரெயில்களில் வழங்கப்படும் உணவுகளின் அளவு மற்றும் விநியோகிப்பவரின் விவரங்கள் இடம் பெறுவதனை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு மத்திய மந்திரி கோயல் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2017-09-21 11:01 GMT
புதுடெல்லி,

ரெயில்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் தரத்தினை உயர்த்துவதற்கு ரெயில்வே வாரியம் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

ரெயில்களில் வழங்கப்பட்டு வரும் உணவு பொருட்களில் தற்பொழுது, சைவம் அல்லது அசைவம் ஆகியவையே குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், ரெயில் வாரியத்தின் கூடுதல் உறுப்பினர் (சுற்றுலா மற்றும் உணவு வசதி) சஞ்சீவ் கார்க் அனைத்து ரெயில்வே மண்டல பொது மேலாளர்களுக்கும் கடிதம் ஒன்றினை நேற்று எழுதியுள்ளார்.

அதில், ரெயில் பயணிகளுக்கு வழங்கப்படும் சைவ அல்லது அசைவ உணவில் அதனை விநியோகிப்பவர் அல்லது ஒப்பந்தக்காரரின் பெயர், எடை, பேக்கிங் செய்யப்பட்ட நாள் மற்றும் தனித்துவ குறியீடு ஆகியவை இடம் பெற வேண்டும் என மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் முடிவு செய்துள்ளார்.

எனவே, ரெயில்களில் விற்கப்படும் ஒவ்வொரு உணவு பொட்டலத்திலும், இந்த விவரங்கள் இருக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வழிமுறைகள் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் கடிதம் தெரிவிக்கின்றது.

கடந்த செப்டம்பர் 5ந்தேதி கோயல் உத்தரவின்படி அனைத்து ரெயில்வே மண்டல பொது மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்ட கடிதத்தில், பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் சுகாதாரம் மற்றும் தரம் ஆகியவற்றை உறுதி செய்வதனை வலியுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ரெயில்வே வழங்கும் உணவு பற்றி இந்த வருட தொடக்கத்தில் மத்திய கணக்கு தணிக்கை துறை கடுமையாக விமர்சித்த நிலையில் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் செய்திகள்