‘வாக்குகளை விட வளர்ச்சியே எங்களுக்கு மிகவும் முக்கியம்’ பிரதமர் தகவல்

வாக்குகளை விட வளர்ச்சியே எங்களுக்கு மிகவும் முக்கியம் என கூறிய பிரதமர் மோடி, 2022–ம் ஆண்டுக்குள் அனைத்து ஏழைகளுக்கும் வீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Update: 2017-09-24 00:00 GMT
வாரணாசி,

பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சுற்றுப்பயணத்தின் 2–வது நாளாகிய நேற்று ஷாகன்ஷாபூரில் மிகப்பெரிய கால்நடை நல முகாமை அவர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்தியா தற்போது உலக அளவில் பால் உற்பத்தியில் பின்தங்கி இருக்கும் நிலையில், இது போன்ற திட்டங்களால் நாட்டின் பால் உற்பத்தி மேம்படும். மாற்று வருமான வாய்ப்புகளுக்காக கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணை தொழில் போன்றவற்றில் ஈடுபடுமாறு விவசாயிகளை ஊக்கப்படுத்தி வருகிறோம். இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் உயர்வது மட்டுமின்றி, தேசிய அளவிலும் வருவாய் உயர்வதற்கான வாய்ப்பு ஏற்படும்.

இந்த கால்நடைகள் வாக்களிக்க போவதில்லை. இவை யாருடைய வாக்காளர்களாவும் இல்லை. இன்று சிலர் ஓட்டுக்காகவே அரசியலில் ஈடுபடுகின்றனர். ஆனால் எங்கள் (பா.ஜனதா) அரசியல், ஓட்டுக்கானது அல்ல. எங்கள் பண்பு, கலாசாரம் வித்தியாசமானது. எங்களுக்கு வாக்குகளை விட நாட்டின் வளர்ச்சியே மிகவும் முக்கியம்.

நாடு முழுவதும் கோடிக்கணக்கான குடும்பங்கள் இன்னும் வீடு இன்றி இருக்கின்றனர். நாட்டின் 75–வது ஆண்டு சுதந்திர தினவிழாவை கொண்டாடும் 2022–ம் ஆண்டுக்குள் அவர்கள் அனைவருக்கும் வீடு வழங்கப்படும். இவ்வாறு கோடிக்கணக்கான வீடுகள் கட்டும் போது அதற்கு செங்கல், சிமெண்டு, இரும்பு, மரம் போன்றவை தேவைப்படும். இதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இங்கு தற்போது தொடங்கப்பட்டு உள்ள கழிவறை கட்டும் திட்டத்தை ‘இஸ்சாட்கர்’ என அங்கீகரித்தற்காக முதல்–மந்திரியை பாராட்டுகிறேன். இந்த வார்த்தை எனக்கு மிகவும் பிடிக்கும். எங்கெல்லாம் ‘இஸ்சாட்கர்’ இருக்கிறதோ, அங்கெல்லாம் நமது தாய்மார்களும், சகோதரிகளும் மானத்துடன் இருக்கின்றனர். அப்படி மானத்தை பற்றி கவலைப்படுபவர்கள் வரும் நாட்களில் ஏராளமான ‘இஸ்சாட்கர்’ கட்டுவார்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

மேலும் செய்திகள்