தாவூத் இப்ராகிம் மனைவி வந்து சென்றது குறித்து மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும்

தாவூத் இப்ராகிம் மனைவி இந்தியா வந்து சென்றதாக வெளியாகி இருக்கும் தகவல் குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்து உள்ளது

Update: 2017-09-23 23:15 GMT

புதுடெல்லி,

மும்பை குண்டுவெடிப்பு சதிகாரனும், சர்வதேச பயங்கரவாதியுமான தாவூத் இப்ராகிம் மீது இந்தியாவில் ஏராளமான வழக்குகள் உள்ளன. இந்தியாவின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அவர் பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. தாவூத் இப்ராகிமை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இப்படி தாவூத் இப்ராகிமை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பாதுகாப்பு நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் நிலையில், அவரது மனைவி மெஜ்பின் ஷேக் கடந்த ஆண்டு ரகசியமாக இந்தியா வந்து சென்றதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. தனது தந்தையை பார்ப்பதற்காக வந்திருந்த அவர் மும்பையில் 15 நாட்கள் தங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி இது குறித்து கடும் அதிர்ச்சியை வெளியிட்டு உள்ளது. இந்த தகவல் பற்றி மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளது. இது தொடர்பாக கட்சியின் செய்தி தொடர்பாளர் ராஜீவ் சுக்லா கூறியதாவது:–

தாவூத் இப்ராகிமின் மனைவி, தனது தந்தையை பார்ப்பதற்காக கடந்த ஆண்டு இந்தியா வந்ததாகவும், மும்பையில் 15 நாட்கள் தங்கி விட்டு ரகசியமாக திரும்பி சென்றதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவல் உண்மை என்றால் அது மிகவும் தீவிரமான வி‌ஷயம் ஆகும். அப்போது உளவுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் என்ன செய்து கொண்டிருந்தன? என்று மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்.

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒட்டுமொத்த நாடும் போராடி வரும் இந்த நேரத்தில், ஒரு பயங்கரவாதியின் மனைவி இந்தியா வந்து, 15 நாட்கள் தங்கிவிட்டு திரும்பி சென்றதை யாரும் அறியவில்லை. இவை அனைத்தும் நமது பயங்கரவாத எதிர்ப்பு போராட்டம் பற்றி கேள்வி எழுப்புகிறது.

எனவே இந்த விவகாரத்தில் மத்திய அரசும், மராட்டிய மாநில அரசும் பதிலளிக்க வேண்டும்.

இவ்வாறு ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.

முன்னதாக காங்கிரஸ் ஊடக பிரிவு பொறுப்பாளரான ரந்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், ‘பா.ஜனதா அரசு பார்த்துக்கொண்டிருக்க பயங்கரவாதி தாவூத் இப்ராகிமின் மனைவி இந்தியா வந்து சென்றிருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து பிரதமர் மோடி பதில் அளிப்பாரா?’ என கேள்வி எழுப்பினார்.

மேலும் செய்திகள்