தெருவில் நாய் அசுத்தம் செய்தால் உரிமையாளருக்கு ரூ. 5000 அபராதம்!

தெருவில் நாய் அசுத்தம் செய்தால் உரிமையாளருக்கு ரூ. 5000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது.

Update: 2017-10-12 13:31 GMT


இந்தூர்,

‘நாட்டில் தூய்மையான நகரங்கள் - 2017’ குறித்து 434 நகரங்களில் புள்ளிவிவரம் எடுக்கப்பட்டது. இதில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாமை, திடக்கழிவுகள் மேலாண்மைக்கு (சாலைகளைச் சுத்தப்படுத்தல், குப்பை சேகரித்தல், அதை வேறு இடத்துக்கு வாகனங்களில் எடுத்துச் செல்லுதல், குப்பைகளைப் பிரித்து மறுசுழற்சி செய்தல் உட்பட) 45% மதிப்பெண் வழங்கப்பட்டது. நகரின் தூய்மையை தொடர்ந்து ஆய்வு செய்வதற்கு 25% மதிப்பெண் மற்றும் குடிமக்களின் கருத்துகளுக்கு 30% மதிப்பெண் என நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்படி நாடு முழுக்க 18 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் நகரம் குறித்த கருத்துகளை  தெரிவித்துள்ளனர்.

இவ்வருடம் நாட்டில் மிக தூய்மையான நகரங்கள் பட்டியலில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரம் முதலிடம் பிடித்தது. ஜாபல்பூர் 21வது இடத்தை பிடித்தது. இரு மாவட்டங்களும் தூய்மையை காக்கும் வகையில் சிறப்பு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. இரு மாநகராட்சியிலும் சுத்தமாக வைத்திருப்பது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர். இந்தூரில் மேயர் மாலினி சிங் தலைமையில் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்ற போது, சாலை மற்றும் தெருக்களில் அசுத்தம் செய்யும் நாய்களின் உரிமையாளருக்கு அபராதம் விதிக்க முடிவு எடுக்கப்பட்டது என மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் மேயரின் உதவி எண்ணுக்கு அழைப்பு விடுத்து புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் இந்த உத்தரவு அங்கு அமல் படுத்தப்பட உள்ளது எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் இந்தூரில் எவ்வளவு அபராத தொகை என தெரிவிக்கப்படவில்லை. இதேபோன்று ஜாபல்பூரிலும் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது நாய்கள் அசுத்தம் செய்தால் அவற்றின் உரிமையாளர்களுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டது.

இருப்பினும் இம்முடிவை விலங்குகள் உரிமைகள் ஆர்வலர்கள் "சாத்தியமற்றதாக” பார்க்கிறார்கள். 

மேலும் செய்திகள்