மம்தா பானர்ஜியை கொலை செய்ய உதவுமாறு மே.வங்க இளைஞருக்கு வந்த குறுஞ்செய்தி

மம்தா பானர்ஜியை கொலை செய்ய உதவுமாறு மேற்கு வங்க இளைஞருக்கு வந்த வாட்ஸ் அப்செயலி மூலம் குறுஞ்செய்தி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2017-10-19 05:17 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை கொலை செய்ய உதவுமாறு அம்மாநிலத்தை சேந்த இளைஞர் ஒருவருக்கு  வந்த வாட்ஸ் அப் குறுஞ்செய்தி அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளத்தில் பாலி டெக்னிக் பயின்று வரும் 19 வயது இளைஞர் ஒருவருக்கு இந்த செய்தி வந்துள்ளது. குறுஞ்செய்தியில், மம்தா பானர்ஜியை கொலை செய்ய உதவினால் 1,00,000 லட்சம் அமெரிக்க டாலர் வெகுமதியாக அளிப்பதாகவும், உங்கள் பாதுகாப்பை பற்றி நீங்கள் அஞ்ச வேண்டாம், வேகமாக செயல்படாவிட்டால், மற்றொரு பையனை நான் தேர்வு செய்துவிடுவேன்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  

தன்னை லதின் என்று அறிமுகப்படுத்தியுள்ள அந்த நபர், பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர் எனவும், இந்தியாவில் இணைந்து செயல்படுவதற்கு ஆட்கள் தேடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து மீண்டும் கல்லூரி மாணவருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய லதின், இந்தியாவுக்கு வருகை தர விரும்புவதாக தெரிவித்துள்ளார். பதிலுக்கு கல்லூரி மாணவர், தான் இந்த நாட்டை மிகவும் நேசிப்பதாகவும், எனவே, நாடு அழிவதை நான் பார்க்க விரும்பவில்லை எனவும் பதில் அளித்துள்ளார். இதற்கு பதில் செய்தி அனுப்பியுள்ள லதின், இந்தியாவை அழிப்பது தங்கள் இயக்கத்தின் நோக்கம் இல்லை என்றும் ஒரே ஒரு நபரை மட்டுமே கொல்ல நினைப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

மேற்கு வங்காள சிஐடி பிரிவு போலீசாருக்கு இந்த தகவல் தெரியவந்ததும், விசாரணை மேற்கொண்டு வரும் சிஐடி போலீசார், யாராவது விளையாட்டாக  குறுஞ்செய்தி  அனுப்பியுள்ளார்களா? அல்லது உண்மையிலேயே பயங்கரவாதிகளின் செயல்படா? என்பது குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்பட்ட இடமான புளோரிடா மாகாண அதிகாரிகளிடம் தொடர்பில் உள்ளனர்.

மேலும் செய்திகள்