ஒடிசா மாநிலத்தில் பட்டாசு தொழிற்சாலை விபத்தில் 8 பேர் சாவு

ஒடிசா மாநிலம் பலாசோர் மாவட்டத்தில் உள்ள பாகல்பூர் என்ற இடத்தில் ஒரு வீட்டில் தொழிற்சாலை அமைத்து சிலர் பட்டாசுகளை தயாரித்து வந்தனர்.

Update: 2017-10-19 22:15 GMT

புவனேஸ்வர்,

அந்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் திடீரென பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்பட்டது.

இதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உடல் சிதறி இறந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 2 பேர் நேற்று இறந்தனர். தொடர்ந்து 7 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்த விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.

சிகிச்சை பெற்று வரும் 7 பேரில், 5 பேரின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

போலீஸ் விசாரணையில் அந்த தொழிற்சாலை உரிமம் இன்றி செயல்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரண உதவி அளிக்கப்படும் என முதல்–மந்திரி நவீன் பட்நாயக் அறிவித்தார்.

மேலும் செய்திகள்