கேதார்நாத் யாத்திரை நாளையுடன் நிறைவு: சாமி தரிசனம் செய்ய இன்று பிரதமர் மோடி வருகை

கேதார்நாத் யாத்திரை நாளையுடன் நிறைவடைய உள்ளதால், பிரதமர் மோடி இன்று சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வருகை தரவுள்ளார்

Update: 2017-10-20 03:33 GMT
கேதர்நாத்,

குளிர்காலம் வருவதை முன்னிட்டு, கேதார்நாத் கோயிலுக்குச் செல்வதற்கான நுழைவாயில் நாளையுடன் மூடப்படவுள்ளது. இந்நிலையில், அங்கு செல்வதற்கு பிரதமர் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:- “டேராடூன் விமான நிலையத்துக்கு பிரதமர் மோடி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு வருகிறார். அங்கு, அவரை உத்தரகண்ட் ஆளுநர் கே.கே.பால், மாநில முதல்வர் திரிவேந்திர சிங் ராவத், உயரதிகாரிகள் ஆகியோர் வரவேற்கின்றனர். அங்கிருந்து அவர் கேதார்நாத் கோயிலுக்கு புறப்பட்டுச் செல்கிறார். அவருடன், ஆளுநரும், முதல்வரும் செல்கிறார்கள்.

பிரதமர் வருகையையொட்டி, டேராடூன், கேதார்நாத் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரதமரின் வருகையை முன்னிட்டும், தீபாவளிப் பண்டிகையையொட்டியும் கேதார்நாத் கோயில் பூக்களாலும், விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி கேதார்நாத்துக்குச் செல்கிறார். இதற்கு முன்பு கடந்த மே மாதம் 3-ஆம் தேதி அவர் அக்கோயிலில் வழிபாடு செய்தார்

மேலும் செய்திகள்