மெர்சல் பட விவகாரம் பிரதமருக்கு ராகுல்காந்தி கண்டனம் ‘‘தமிழின் பெருமையை சீர்குலைக்க வேண்டாம்’’

மெர்சல் பட விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு தமிழின் பெருமையை சீர்குலைக்க முயற்சிக்கவேண்டாம் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.

Update: 2017-10-21 23:15 GMT

புதுடெல்லி,

நடிகர் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான தமிழ்த்திரைப்படம் ‘மெர்சல்’. இந்த படத்தில் வரும் சில சூடான வசனங்கள் அரசியலில் புயலை கிளப்பிவிட்டு இருக்கிறது.

குறிப்பாக மோடி அரசின் சரக்கு சேவை வரி விதிப்பு(ஜி.எஸ்.டி.), டிஜிட்டல் இந்தியா திட்டங்களை படத்தில் கடுமையாக விமர்சிப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கண்டனம் தெரிவித்து இருந்தார். ஜி.எஸ்.டி. மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்து அரசியல் உள்நோக்கத்துடன் படத்தில் தவறான தகவல்கள் கூறப்பட்டு இருக்கிறது. எனவே இது தொடர்பான காட்சிகளை நீக்கம் செய்யவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி மெர்சல் பட விவகாரம் தொடர்பாக டுவிட்டரில் நேற்று தனது கருத்தை பதிவு செய்தார்.

அதில், ‘‘திரு. மோடி அவர்களே, திரைப்படம் தமிழ் கலாசாரத்தையும், மொழியின் சிறப்பையும் ஆழமாக வெளிப்படுத்துகிறது. எனவே மெர்சல் படத்தில் தலையிட்டு தமிழின் பெருமையை சீர்குலைக்க முயற்சிக்கவேண்டாம்’’ என்று கேட்டுக்கொண்டு உள்ளார்.

வழக்கமாக ராகுல்காந்தி திரைப்படம் குறித்த சர்ச்சைகளில் இறங்குவதில்லை. ஆனால் மெர்சல் பட விவகாரம் தொடர்பாக அவர் நேரடியாக கருத்து தெரிவித்து இருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

முன்னதாக காங்கிரசின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரமும், மெர்சல் படம் தொடர்பாக பா.ஜனதா தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கு பதில் அளிக்கும் விதமாக டுவிட்டர் பதிவுகளில் கிண்டல் செய்தார்.

அவர் தனது முதல் டுவிட்டர் பதிவில், ‘‘சினிமா படத் தயாரிப்பாளர்களின் கவனத்துக்கு, விரைவில் ஒரு சட்டம் வரப்போகிறது. அதன்படி இனி நீங்கள் மோடி அரசின் கொள்கைகளை புகழும் விதமாக ஆவணப்படங்கள் மட்டுமே தயாரிக்க இயலும்’’ என்று கூறி இருந்தார்.

மற்றொரு பதிவில், ‘‘மெர்சல் படத்தின் சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று பா.ஜனதா கூறுகிறது. இப்போது பராசக்தி படம் வெளியாகி இருந்தால் என்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்’’ என குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் செய்திகள்