குஜராத்தில் போட்டியிடுவது தொடர்பாக பா.ஜனதா – ஐக்கிய ஜனதாதளம் இடையே மோதல்

பீகாரில் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதளத்துடன் மெகா கூட்டணி அமைத்திருந்த ஐக்கிய ஜனதாதளம் கட்சி, கடந்த ஜூலையில் அந்த கூட்டணியில் இருந்து விலகி பா.ஜனதாவுடன் கைகோர்த்தது.

Update: 2017-10-29 20:28 GMT

பாட்னா,

பீகாரில் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதளத்துடன் மெகா கூட்டணி அமைத்திருந்த ஐக்கிய ஜனதாதளம் கட்சி, கடந்த ஜூலையில் அந்த கூட்டணியில் இருந்து விலகி பா.ஜனதாவுடன் கைகோர்த்தது. குஜராத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட ஐக்கிய ஜனதாதளம் விரும்பியது.

ஆனால் இதற்கு பா.ஜனதா தரப்பில் இருந்து எந்த அழைப்பும் வராததால், அங்கு தனித்து போட்டியிடப்போவதாக ஐக்கிய ஜனதாதள தேசிய பொதுச்செயலாளர் கே.சி.தியாகி அறிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து ஐக்கிய ஜனதாதளத்தை சேர்ந்தவரும், மாநில மந்திரியுமான மகேஷ்வர் ஹசாரி கூறும்போது, ‘குஜராத்தில் சிறிய கட்சிகளுடன் கூட்டணி ஏற்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது பெரிய கட்சியான பா.ஜனதாவின் பொறுப்பாகும். ஆனால் அந்த கட்சியிடம் அது தொடர்பான எந்த அறிகுறியும் காணவில்லை’ என்று குற்றம் சாட்டினார்.

அதேநேரம் மாநில பா.ஜனதா செய்தி தொடர்பாளரான நவல் கிஷோர் யாதவ் கூறுகையில், ‘ஐக்கிய ஜனதாதளம் ஒரு மாநிலக்கட்சி என்பதை நிதிஷ்குமாரே ஒப்புக்கொண்டு இருக்கிறார். அப்படியிருக்க மற்ற மாநிலங்களில் ஐக்கிய ஜனதாதளம் மூக்கை நீட்டுவதேன்? இது நல்லதல்ல’ என்றார்.

இவ்வாறு இரு கட்சிகளும் குஜராத்தில் தனித்தனியாக களம் காண்பதை வரவேற்றுள்ள ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும், முன்னாள் முதல்–மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ், பீகாரிலும் இதைப்போல தனித்தனியாக போட்டியிட வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்