ஓகி புயல் பாதிப்பு: விரிவான ஆய்வறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்பிக்கப்படும்- அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த ஆய்வு நடைபெறுகிறது, விரைவில் முழுமையான ஆய்வறிக்கை மத்திய அரசிடம் சமர்பிக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

Update: 2017-12-14 11:02 GMT
புதுடெல்லி

ஒகி புயலால் 619 மீனவர்களை காணவில்லை என உள்துறை அமைச்சகம் தகவல்  வெளியிட்டு உள்ளது. ஒகி புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு அமைக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெறுவதாகவும் உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டு உள்ளது.

ஓகி புயலால் காணாமல் போனவர்களின் இறுதி எண்ணிக்கையை தமிழக அரசு தரவில்லை என்று மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. வீடு வீடாக சென்று மீனவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், சேகரிக்கும் பணி முடிவடைந்தவுடன் இறுதி எண்ணிக்கை தெரிய வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒகி புயல் நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக ரூ 1,843 கோடி தேவை என  மத்திய அரசிடம் கேரளா அரசு கோரிக்கை வைத்துள்ளது.
கேரளாவின் கோரிக்கையை ஏற்று, ஆய்வு மேற்கொள்ள மத்திய குழுவை அனுப்புவதாக உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டு உள்ளது.

டெல்லி மாநில நிதி அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்ற பிறகு  அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த ஆய்வு நடைபெறுகிறது, விரைவில் முழுமையான ஆய்வறிக்கை மத்திய அரசிடம் சமர்பிக்கப்படும். கடலில் தற்போது சீரான நிலை ஏற்பட்டுள்ளதால், மாயமான மீனவர்கள் மீண்டும் திரும்புவார்கள் என நம்பிக்கை.காணாமல் போன மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. தமிழகத்திற்கு ரூ.2,000 கோடியை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு  உள்ளது.மாலத்தீவில் மீனவர்கள் சிலர் கரை சேர்ந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது 

ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் நாங்கள்; பணநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்