நகர்புறங்களில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் இரவு 9 மணிக்கு மேல் பணம் நிரப்பக்கூடாது: மத்திய அரசு

நகர்புறங்களில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் இரவு 9 மணிக்கு மேல் பணம் நிரப்பக்கூடாது என மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

Update: 2017-12-15 03:59 GMT
புதுடெல்லி,

ஏ.டி.எம்களுக்கு பணம் நிரப்ப, பணம் எடுத்துச்செல்லும் வாகனங்களை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களை கருத்தில் கொண்டு, நகர்புறங்களில் இரவு 9 மணிக்கு மேலும், கிராமப்புறங்களில் மாலை 6 மணிக்கு மேலும் பணம் நிரப்பக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. 

அதேபோல், வங்கிகளில் இருந்து பணம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள்,  ஒவ்வொரு நாளும் மதியத்துக்கு முன்பே வங்கிகளில் இருந்து பணத்தை பெற்றுவிட வேண்டும். ஒரு வாகனத்தில் ரூ.5 கோடிக்கு மேல் எக்காரணத்தை கொண்டும் பணத்தை எடுத்துச்செல்லக்கூடாது.

 ரூ.5 லட்சத்துக்கு மேல் பணத்தை எடுத்துச்செல்லும் போது பாதுகாப்பு வசதிகள் கொண்ட பிரத்யேக வாகனத்தில் செல்ல வேண்டும் என்பன போன்ற மேலும் சில விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.   இந்த பரிந்துரைகள் மத்திய சட்ட அமைச்சக அனுமதிக்கு பிறகு அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்