பிப்.1 முதல் புதிய வரி: வரலாறு காணாத வகையில் உயர்கிறது சிகரெட் விலை
புகையிலை பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பு பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.;
புதுடெல்லி,
சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி சட்டத்திருத்தம் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், கலால் திருத்த மசோதா - 2025 நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாவின்படி, சிகரெட், சுருட்டு, ஹூக்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீது கூடுதல் செஸ் வரி விதிக்கப்படுகிறது. அதாவது, தற்போதையசட்டத்தின்படி, சிகரெட்டுகளின் நீளம் மற்றும் வகையை பொறுத்து, 1,000 சிகரெட்டுகளுக்கு, 200 முதல் 735 ரூபாய் வரை கலால் வரி விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் புகையிலை பொருட்களுக்கு கூடுதல் வரி விதிப்பு பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு இன்று அரசாணையை வெளியிட்டுள்ளது. இதனால் பிப்ரவரி 1 தேதி முதல் சிகரெட் விலை கணிசமாக உயரும். 1,000 சிகரெட்களுக்கு ரூ.2,050 முதல் ரூ.8,500 வரை கூடுதல் கலால் வரி விதிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல, மெல்லும் புகையிலை மீதான வரி, 25 சதவீதத்தில் இருந்து, 100; ஹூக்கா புகையிலை வரி, 25 சதவீதத்தில் இருந்து, 40; பைப் சிகரெட்டுகளுக்கான புகை கலவைகள் மீதான வரி, 60 சதவீதத்தில் இருந்து 325 சதவீதமாக அதிகரிக்க உள்ளது. இந்த கூடுதல் செஸ் உயர்வால் புகையிலை பொருட்கள் விலை பலமடங்கு உயர உள்ளது.