பாராளுமன்றதில் நேர்மறையான மற்றும் ஆக்கப்பூர்வமான விவாதம் நடக்கும் என நம்புகிறேன் பிரதமர் மோடி

பாராளுமன்றத்தில் நேர்மறையான மற்றும் ஆக்கப்பூர்வமான விவாதம் நடக்கும் என நம்புகிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2017-12-15 05:37 GMT
புதுடெல்லி,

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. ஜனவரி 5–ந்தேதி வரை நடைபெற இருக்கும் இந்த கூட்டத்தில் 14 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு தீர்மானித்து உள்ளது.

அதேசமயம், பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்பு, சரக்கு, சேவை வரியை அமல்படுத்தியதில் ஏற்பட்ட குறைபாடு, விவசாயிகள் பிரச்சினை, ரபேல் போர் விமானங்கள் வாங்க மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகளை கிளப்பி மத்திய அரசுக்கு நெருக்கடியை கொடுக்க எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டுகின்றன.

இந்நிலையில் பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதை முன்னிட்டு பிரதமர் மோடி செய்தியார்களிடம் கூறியதாவது:

நேற்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி, பாராளுமன்ற கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. பாராளுமன்றத்தில் நேர்மறையான மற்றும் ஆக்கப்பூர்வமான விவாவதம் நடைபெறும் என நம்புகிறேன்.

அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து நாட்டு மக்களின் நலனுக்காக பணியாற்ற வேண்டும். இந்த பாராளுமன்ற கூட்டத்தொடர் மூலம் நாட்டு மக்களுக்கு பயன் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்