பொதுமக்கள் புகாரின் பேரில் ஏர்டெல் மீது ஆதார் ஆணையம் நடவடிக்கை

வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி அவர்களது பெயரில் டிஜிட்டல் வங்கி கணக்குகளை தொடங்க வைத்துள்ளதாக ஏர்டெல் செல்போன் சேவை நிறுவனம் மீது புகார் எழுந்தது.

Update: 2017-12-16 23:15 GMT

புதுடெல்லி,

சிம் கார்டுகளுக்காக வழங்கப்படுகிற ஆதார் எண்களைப் பயன்படுத்தி ஏர்டெல் பேமெண்ட்ஸ் பாங்க் இதுபோன்று வங்கி கணக்குகளை தொடங்கி உள்ளது.

23 லட்சம் பேரின் ஏர்டெல் பேமெண்ட்ஸ் பாங்க் கணக்குகளில், வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல், ரூ.47 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது.

சமையல் கியாஸ் மானியம் உள்ளிட்டவை கூட வாடிக்கையாளர்களுக்கு அவர்களது நாட்டுடமையாக்கப்பட்ட வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படாமல், ஏர்டெல் பேமெண்ட்ஸ் பாங்க் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை வாடிக்கையாளர்கள் காகிதப்பணமாக எடுக்க முடியாது. ஆன்லைன் பரிமாற்றத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.

இது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து புகார்கள் சென்றதின் காரணமாக ஆதார் ஆணையம் விசாரணை நடத்த உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து இப்போது ஏர்டெல் நிறுவனத்தின் இ–கேஒய்சி உரிமத்தை தற்காலிகமாக இடைநீக்கம் செய்து ஆதார் ஆணையம் நேற்று உத்தரவிட்டது.

இதன் காரணமாக வாடிக்கையாளர்களின் ஆதார் எண்ணை செல்போன்களுடன் இணைக்கும் பணியை ஏர்டெல் நிறுவனம் மேற்கொள்ள முடியாது. வாடிக்கையாளர்களின் சுய விவர சரிபார்ப்பு பணியை ஆதார் எண் கொண்டு மேற்கொள்ளவும் இயலாது.

மேலும் ஆதார் எண் அடிப்படையில் டிஜிட்டல் வங்கி கணக்குகளை ஏர்டெல் பேமெண்ட்ஸ் பாங்க் தொடங்கவும் முடியாது.

மேலும் செய்திகள்