குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது

சர்வதேச அளவில் குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர ‘வாட்ஸ் அப்’ குழு. சி.பி.ஐ. அதிரடியில் கும்பல் சிக்கியது.

Update: 2018-02-22 23:30 GMT

புதுடெல்லி,

பாலியல் ரீதியில் வக்கிர புத்தி உள்ளவர்களிடம் குழந்தைகளின் ஆபாச வீடியோ படங்கள், தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கு சர்வதேச அளவில் ஒரு வாட்ஸ் அப் குழுவை உருவாக்கி நடத்தி வந்து உள்ளார், ஒரு வேலை இல்லாத வாலிபர்.

அவர் உத்தரபிரதேச மாநிலம் கன்னாஜ் பகுதியை சேர்ந்த நிகில் வர்மா (வயது 20).

இவர் உருவாக்கி நடத்தி வந்து உள்ள வாட்ஸ் அப் குழுவில் அமெரிக்கா, சீனா, நியூசிலாந்து, மெக்சிகோ, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பிரேசில், கென்யா, நைஜீரியா, இலங்கை என பல நாடுகளை சேர்ந்த 119 பேர் சேர்ந்து தொடர்பில் இருந்து வந்து உள்ளனர்.

நிகில் வர்மாவுக்கு இதில் சிலர் பக்க பலமாகவும் இருந்து வந்து இருக்கிறார்கள். இது குறித்த ரகசிய தகவல், சி.பி.ஐ.க்கு கிடைத்தது. அதைத் தொடர்ந்து சி.பி.ஐ. கண்காணிக்கத் தொடங்கியது.

அதில் நிகில் வர்மாவின் லீலைகளை உறுதி செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் அவரையும், அவரது கூட்டாளிகள் 4 பேரையும் கைது செய்தனர்.

இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனைகள் நடத்தி, செல்போன்கள், மடிக்கணினிகள் மற்றும் சாதனங்களை கைப்பற்றினர்.

நிகில் வர்மா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது தகவல் தொழில் நுட்ப சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு தலா 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.

மேலும் செய்திகள்