கேரளாவில் வனப்பகுதிக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு மாநில அரசு தடை விதித்து உத்தரவு

கேரளாவில் வனப்பகுதிக்குள் செல்ல சுற்றுலா பயணிகளுக்கு மாநில அரசு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. #KuranganiForestFire

Update: 2018-03-12 11:10 GMT

திருவனந்தபுரம்,

போடி அருகே உள்ள குரங்கணி மலைப்பகுதியில் திடீரென காட்டுத்தீ பரவியதில் அங்கே மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர். தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். சுமார் 17 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் சென்ற கொழுக்குமலை வனப்பகுதி கேரள வனத்துறைக்கும், தமிழக வனத்துறைக்கும் இடைப்பட்ட பகுதியாகும். வனப்பகுதியில் சாகசப் பயணிகள் குழு மலைஏற்றம் செய்துவிட்டு இறங்கும் போது, காட்டுத் தீயில் சிக்கி உள்ளனர். மீட்பு பணியில் கேரள வனத்துறையும் உதவியது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கேரளா முழுவதும் மலையேற்றத்துக்கு தற்காலிக தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. 

மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முதல்–மந்திரி பினராயி விஜயன் வெளியிட்ட அறிக்கையில் மாநில வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு வனத்துறையினரை கேட்டுக்கொண்டிருப்பதாகவும், இந்த சூழ்நிலையை ஆணையம் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். குரங்கணி மலைப்பகுதியில் காட்டுத்தீயில் சிக்கியவர்களை மீட்க தமிழக அதிகாரிகளுக்கு இடுக்கி மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் ஆலோசனைகளை வழங்கியதாக கூறியுள்ள பினராயி விஜயன், இந்த மீட்பு பணிகளில் கேரள மாநில போலீஸ், தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறையினரும் ஈடுபட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார். 

 கேரளாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இனி அனுமதி இல்லாமல் கேரள வனப்பகுதிக்குள் செல்ல முடியாது. அவ்வாறு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்