சீனா நமது எல்லையில் விமானநிலையங்கள் ஹெலிபேட்கள் அமைத்து வருகிறது பிரதமர் மோடி மவுனம் காத்து வருகிறார் ராகுல் குற்றச்சாட்டு

சீனா நமது எல்லையில் விமான நிலையங்களும் ஹெலிபேட்களையும் அமைத்து வருகிறது இது குறித்து பிரதமர் மோடி மவுனம் காத்து வருகிறார் என ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். #PMModi #RahulGandhi

Update: 2018-03-21 12:13 GMT
பெங்களூர்,

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி 3-வது கட்டமாக கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அவர் நேற்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் மங்களூருவுக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் உடுப்பி மாவட்டம் தெங்கஎருமால் பகுதிக்கு சென்று அங்கு புதிதாக கட்டப்பட்டு உள்ள அரசியல் பயிற்சி பள்ளியான ராஜீவ்காந்தி தேசிய அகாடமியை திறந்து வைத்தார். 

பின்னர் அங்கிருந்து படுபித்ரிக்கு பிரசார வாகனத்தில் அவர் சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசினார். இதனை தொடர்ந்து காபு, முல்கி, சூரத்கல் ஆகிய பகுதிகளில் நடந்த பொதுக்கூட்டங்களிலும் அவர் கலந்து கொண்டு பேசினார். 

இந்தநிலையில் இன்று சிம்மகளூரில் நடைபெற்று வரும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

சீனா நமது எல்லையில் ஹெலிபேட்களையும் விமானநிலையங்களையும் அமைத்து வருகிறது ஆனால் பிரதமர் மோடி இது குறித்து மவுனம் காத்து வருகிறார். பிரதமர் மோடி இங்கு வந்து ஊழலை எதிர்த்து பேசுகிறார்.  அவருடன் பாஜக வேட்பாளர்  ஊழலில் குற்றம்சாட்டப்பட்ட சிறை சென்றவர்கள்மேடையில் ஆகியோர் உட்கார்ந்து இருக்கின்றனர். 

என் பாட்டி இந்திரா காந்திக்கு  (1978 ல் இந்திரா காந்தி சிக்மகளூரில் இருந்து போட்டியிட்டார்) நீங்கள் ஆதரவு அளித்தீர்கள். நான் அதனை மறக்க முடியாது. எப்போதும் எனக்கு நீங்கள் வேண்டும். 

நான் எப்போதும்  உங்களுடன் இருப்பேன்.  சிருங்கேரி மடத்தில் உள்ள குழந்தைகளை சந்தித்து உரையாடினேன். பிரதமர் மோடியை விட அந்த குழந்தைகளுக்கு மதம் குறித்து நன்றாக அறிந்து வைத்து இருக்கிறார்கள். குழந்தைகள் மதம் என்றால் என்று கேட்டேன் அதற்கு குழந்தைகள் மதம் என்றால் உண்மை என கூறினர்.

பிரதமர் மோடி பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே அளித்து வருகிறார்.  சத்திய மேவ ஜெயதே என்பதற்கான அர்த்தம் பிரதமர் மோடிக்கு ஏன் புரியவில்லை.  கறுப்புப்பணத்தை மீட்டு மக்கள் வங்கிக்கணக்குகளில் ரூ.15 லட்சம் செலுத்துவேன் என்றது என்னாயிற்று? பிரதமர் அறிவித்தபடி ஆண்டுதோறும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு ஏன் கிடைக்கவில்லை.

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றி வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்