லோயா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு நீதித்துறையை தவறாக வழிநடத்த முடியாது என்பதை காட்டிஉள்ளது - ராஜ்நாத்

லோயா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு நீதித்துறையை தவறாக வழிநடத்த முடியாது என்பதை காட்டிஉள்ளது என ராஜ்நாத் சிங் கூறிஉள்ளார். #BJP #LoyaCase #Rajnath

Update: 2018-04-19 14:03 GMT

புதுடெல்லி,


குஜராத் மாநிலத்தில் கடந்த 2005-ம் ஆண்டு, பயங்கரவாதி என கருதப்பட்ட சொராபுதின் ஷேக் உள்ளிட்ட 3 பேர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டது போலி என்கவுண்ட்டர் என்று சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக அப்போது குஜராத் உள்துறை மந்திரியாக இருந்த தற்போதைய பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு நீதிபதி பி.எச்.லோயா 2014-ம் ஆண்டு நாக்பூரில் திடீரென்று மரணம் அடைந்தார்.

நீதிபதி லோயாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பியதால், நீதிபதி லோயாவின் மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகள் தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், “அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் மூலமாக நீதித்துறையை தவறாக வழிநடத்த முடியாது என்பதை லோயா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு காட்டி உள்ளது. பாரதீய ஜனதாவை இலக்காக்க பல்வேறு முயற்சிகள் செய்யப்படுவது, போலியான உண்மைகள் அடிப்படையில் பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களின் புகழை படுகொலை செய்ய முயற்சிப்பது மிகவும் துரதிஷ்டவசமானது, இந்த முயற்சிகள் மீண்டும் ஒருமுறை தோல்வி அடைந்து உள்ளது,” என கூறிஉள்ளார். 

மேலும் செய்திகள்