பா.ஜனதா எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு மோடி உத்தரவு

யாரும் பொறுப்பற்ற முறையில் பேசக் கூடாது என்று பா.ஜனதா எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

Update: 2018-04-22 23:45 GMT

புதுடெல்லி,

பிரதமர் மோடி பா.ஜனதா எம்.பி., எம்.எல்.ஏ.க்களுடன் நேற்று மொபைல் போன் செயலி வழியாக கலந்துரையாடினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

நமது தொண்டர்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோதும் கடினமான உழைத்தார்கள். தற்போதும் அவர்கள் அரசுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையை நாம் அடைந்திருப்பதற்கு காரணம் மக்களுடன் நம்மை இணைத்துக் கொண்டிருப்பதுதான்.

நமது எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதி மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதுடன் அவர்களது பிரச்சினைகளை அடிப்படை நிலையில் இருந்து அரசு வரைக்கும் கொண்டு செல்ல வேண்டும்.

நமது கட்சியின் பெரும்பான்மையான எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இதர பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் பழங்குடியின வகுப்பினராக உள்ளனர். எனவே இனி நம்மை யாராலும் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கானவர்கள், நகர்ப்புற மக்களுக்கு மட்டுமே ஆதரவானவர்கள் அல்லது வட இந்திய ஆதரவாளர்கள் என்று கூற இயலாது.

தற்போது நமது கட்சி சார்பில் நாடு முழுவதும் கிராமங்களில் கடந்த 14–ந்தேதி முதல் வருகிற 5–ந்தேதி வரை நடத்தும் கிராம சுயராஜ்ய பிரசாரம் மூலம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தங்களது தொகுதியில் உள்ள 4, 5 பிரச்சினைகளுக்காவது தீர்வு காணவேண்டும்.

காங்கிரஸ் தவறு செய்ததால் மட்டும் நாம் ஆட்சிக்கு வந்துவிடவில்லை. மக்களுடன் நாம் எப்போதும் இணைந்து இருந்ததால் ஆட்சியை கைப்பற்றினோம். தற்போது நமது கடமை மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சினைகளை தீர்த்து வைக்கவேண்டும் என்பதுதான். மிக முக்கியமாக மக்களுடன் இணைந்து அவர்களுக்காக பணியாற்றவேண்டும். நாம் நிறைவேற்றியுள்ள திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்கமாக எடுத்துக் கூறவேண்டும்.

நாம் தொடர்ந்து தவறுகள் செய்வதன் மூலம் ஊடகங்களுக்கு தீனி போட்டு வருகிறோம். ஊடகங்களின் கேமரா முன்பாக ஏதோ சமூக விஞ்ஞானிகள் போலவும், ஆய்வாளர்கள் போலவும் வார்த்தைகளை கொட்டுகிறோம். இது நம்மை சிக்க வைத்து விடுகிறது.

பயங்கரவாதம், பாலியல் வன்கொடுமை என்று எந்த பிரச்சினை என்றாலும் நாம் வாய் தவறி கூறும் வார்த்தைகள் ஊடகங்களில் பெரிதாக்கப்படுகின்றன. இதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் நாம் நமது கருத்துகளை தொடர்ந்து கூறி வருகிறோம். இதனால் கட்சிக்கும், ஆட்சிக்கும் அவப்பெயர் உருவாகி வருகிறது. எனவே பொறுப்பற்ற முறையில் அர்த்தமற்ற கருத்துகள் தெரிவிப்பதையும், ஆர்வக்கோளாறில் கருத்துகள் கூறுவதையும் உடனடியாக நாம் நிறுத்திக் கொள்ளவேண்டும். இதற்காக ஊடகங்களை நாம் குறை கூறக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

அண்மைக்காலமாக பா.ஜனதா தலைவர்கள் சிலரின் பேச்சுகள் சர்ச்சையை உருவாக்கும் விதமாக அமைந்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் பிரதமர் மோடி, கட்சியினருக்கு இந்த உத்தரவை பிறப்பித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்