திருமலை சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்ட வந்ததாக 13 தமிழர்கள் கைது

திருமலை சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்ட வந்ததாக கூறி 13 தமிழர்கள் உள்பட 15 பேரை திருப்பதி போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-04-29 23:45 GMT
திருப்பதி, 

தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் போர்வையில் 15 பேர் கொண்ட கும்பல் திருமலைக்கு வந்து கடைவீதிகளில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிவதாக திருப்பதியில் உள்ள செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிரடிப்படை போலீசார் திருமலைக்கு வந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அந்த கும்பல் திருமலையில் ஏழுமலையான் கோவில் அருகே ஒரு உணவகத்தில் சாப்பிடுவதற்காக சென்றுகொண்டிருந்தபோது போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அவர்களை திருப்பதிக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்களில் 13 பேர் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையைச் சேர்ந்தவர்கள் என்பதும் மற்ற 2 பேர் திருப்பதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. அவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்ததாக கூறினர்.

அந்த வேனில் போலீசார் சோதனை செய்தபோது, அதில் பல நாட்களுக்கு தேவையான காய்கறிகள், சமையல் பொருட்கள், அடுப்பு ஆகியவை இருந்தன. வேனில் பதிவெண்ணும் இல்லை. சாமி தரிசனம் செய்ய வந்தவர்கள் காய்கறிகளை எதற்காக கொண்டுவந்தனர் என சந்தேகித்த போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் இருந்து வேனில் திருமலைக்கு வந்து, சேஷாசலம் வனப்பகுதியில் செம்மரங்களை வெட்ட வந்ததாக கூறினர். 13 தமிழர்களையும் திருப்பதியை சேர்ந்த இருவரும் அழைத்துவந்ததாக கூறினர். இதையடுத்து 15 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் வந்த வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்கள் இன்று (திங்கட்கிழமை) திருப்பதி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்