அம்பேத்கரின் கனவை நனவாக்க முயற்சித்து வருகிறோம்; பிரதமர் மோடி

இந்தியாவை சக்தி வாய்ந்த மற்றும் வளமிக்க நாடாக உருவாக்கும் அம்பேத்கரின் கனவை நனவாக்க முயற்சித்து வருகிறோம் என பிரதமர் மோடி இன்று கூறியுள்ளார். #PMModi

Update: 2018-05-10 07:34 GMT

பெங்களூரு,

கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் வருகிற 12ந்தேதி நடைபெறுகிறது.  இதற்காக ஆளும் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சிகளிடையே கடும் போட்டி ஏற்பட்டு உள்ளது.  தேர்தல் பேரணி மற்றும் பிரசாரங்களில் இரு கட்சிகளும் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், நரேந்திர மோடி ஆப் வழியே கர்நாடக எஸ்.சி., எஸ்.டி. மற்றும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட பாரதீய ஜனதா கட்சி தொண்டர்களிடம் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அவர் பேசும்பொழுது, காங்கிரஸ் கட்சி அம்பேத்கரை மதித்ததில்லை.  ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங்கிரஸ் கட்சி அம்பேத்கருக்கு பாரத் ரத்னா விருது வழங்க தவறி விட்டது என கூறினார்.

தொடர்ந்து அவர், எங்களது அரசாங்கம் எஸ்.சி., எஸ்.டி. (வன்முறை தடுப்பு) சட்டத்தினை கூடுதல் வலிமை கொண்ட ஒன்றாக ஆக்கியுள்ளது.  எஸ்.சி., எஸ்.டி., இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை இனத்தவர்களை சேர்ந்தவர்களே அதிக எண்ணிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர் என்றும் நினைவுப்படுத்தி பேசினார்.

நாங்கள் இந்தியாவை சக்தி வாய்ந்த மற்றும் வளமிக்க நாடாக உருவாக்கும் அம்பேத்கரின் கனவை நனவாக்க முயற்சித்து வருகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்