லால் பகதூர் சாஸ்திரி மரணம் தொடர்பான விசாரணை கமிட்டியின் ஆவணங்கள் எங்கே? பிரதமர் அலுவலகத்திடம் தகவல் ஆணையர் கேள்வி

லால் பகதூர் சாஸ்திரி மரணம் தொடர்பான விசாரணை கமிட்டியின் ஆவணங்கள் எங்கே? என மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு தற்போது பிரதமர் அலுவலகத்துக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

Update: 2018-05-13 23:15 GMT
புதுடெல்லி, 

இந்தியாவின் 2-வது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி கடந்த 1966-ம் ஆண்டு அப்போதைய சோவியத் ரஷியாவுக்கு சென்றிருந்த போது, அங்குள்ள தாஷ்கண்ட் நகரில் மர்மமான முறையில் மரணமடைந்தார். பாகிஸ்தானுடனான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட சில மணி நேரங்களில் இந்த சோகம் நிகழ்ந்தது.

லால் பகதூர் சாஸ்திரியின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு 1977-ல் ராஜ் நரேன் கமிட்டி அமைக்கப்பட்டது. ஜனதா கட்சியின் ஆட்சியில் அமைக்கப்பட்ட இந்த குழுவின் அறிக்கை வெளியிடப்படவில்லை.

இந்த அறிக்கை தொடர்பான ஆவணங்கள் எங்கே? என மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு தற்போது பிரதமர் அலுவலகத்துக்கு கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் உள்துறை மற்றும் வெளியுறவு அமைச்சகங்களுக்கும் கடிதம் எழுதியுள்ள அவர், நரேன் கமிட்டி அறிக்கை தொடர்பான ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுமாறு வலியுறுத்தி உள்ளார்.

தங்களுக்கு பிரியமான தலைவரின் மரணத்துக்கு பின்னால் உள்ள உண்மைகளை அறிய மக்கள் விரும்புவதாக ஸ்ரீதர் ஆச்சார்யலு கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்