சரத் யாதவின் புதிய கட்சி ‘லோக்தந்திரிக் ஜனதாதளம்’: டெல்லியில் 18-ந்தேதி தொடக்க விழா

ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் முன்னாள் தலைவரான சரத் யாதவ், லோக்தந்திரிக் ஜனதாதளம் என்ற பெயரில் புதிய கட்சியை 18-ந்தேதி தொடங்குகிறார்.

Update: 2018-05-13 22:15 GMT
புதுடெல்லி,

பீகாரில் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணி அமைத்து இருந்த ஐக்கிய ஜனதாதளம் தலைவர் நிதிஷ் குமார், கடந்த ஆண்டு அந்த கூட்டணியில் இருந்து விலகி பா.ஜனதாவுடன் கூட்டணி சேர்ந்தார். இது கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சரத் யாதவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனால் கட்சி நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்த அவர், கடந்த டிசம்பர் மாதம் எதிர்க்கட்சிகள் பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். இதனால் அவரை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து ஐக்கிய ஜனதாதளம் நடவடிக்கை எடுத்தது.

இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த சரத் யாதவ், அவரது தலைமையிலான பிரிவுதான் உண்மையான ஐக்கிய ஜனதாதளம் எனவும் அறிவித்தார். ஆனால் இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு அவரது தகுதி நீக்கத்துக்கு தடை விதிக்க மறுத்தது. எனினும் எம்.பி.க்களுக்கான சம்பளம் மற்றும் படிகளை அவருக்கு வழங்க அனுமதித்தது.

இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடந்து வரும் நிலையில், நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கட்சியினர் சமீபத்தில் தேர்தல் கமிஷனை அணுகினர். சரத் யாதவ் தகுதி நீக்கத்தால் காலியாகி இருக்கும் அந்த இடத்துக்கு தேர்தல் அறிவிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

இந்த நிலையில் சரத் யாதவ் ‘லோக்தந்திரிக் ஜனதாதளம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்க உள்ளார். இதற்கான தொடக்க விழா 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) டெல்லியில் நடைபெறுகிறது. விவசாயிகள், தலித் பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்டவர்கள், இளைஞர்கள் மற்றும் சமூகத்தின் அடித்தட்டில் வாழும் மக்களுக்காக இந்த கட்சி பாடுபடும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய கட்சிக்கான நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2019-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் சரத் யாதவ் ஈடுபட்டு வரும் நிலையில், அதற்கான வாய்ப்புகளை இந்த கட்சி உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கட்சி தொடங்குவதை முன்னிட்டு செய்தியாளர்களிடம் பேசிய சரத் யாதவ், மத்திய அரசை கடுமையாக குற்றம் சாட்டினார். பெட்ரோல்-டீசலுக்கு வரி விதித்து சுமார் ரூ.19 லட்சம் கோடி அளவுக்கு மோடி அரசு கொள்ளையடித்து இருப்பதாக கூறிய அவர், இதில் ரூ.8.13 லட்சம் கோடி அளவுக்கு மாநிலங்கள் பெற்று இருப்பதாக தெரிவித்தார்.

கடந்த 4 ஆண்டு ஆட்சியில் மோடி அரசு அனைத்து நிலைகளிலும் தோல்வி அடைந்திருப்பதாகவும், சிறுபான்மையினர், தலித் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் சரத் யாதவ் கண்டனம் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்