கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 53 ஆக அதிகரிப்பு: பிரதமர், ஜனாதிபதி இரங்கல்

வட மாநிலங்களில் புயல் மற்றும் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.

Update: 2018-05-14 06:58 GMT
புதுடெல்லி,

வடமாநிலங்களில் நேற்று கனமழை பெய்தது. இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. நேற்று மாலை பெய்த இந்த கனமழையால் 59 பேர் உயிரிழந்தனர். உத்தரபிரதேசத்தில் மட்டும் 39 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், கனமழைக்கு பலியானவர்களின் குடும்பத்தினருக்கு, ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்து உள்ளார். 

ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:- “ மழை மற்றும் இடி மின்னலால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலர் உயிரிழந்த செய்தி கேட்டு துயருற்றேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், “ நாட்டில் சில இடங்களில் புயல் மற்றும் கனமழைக்கு உயிரிழப்பு ஏற்பட்ட செய்தி வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுளள டுவிட்டர் பதிவில், “ ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்குமாறு காங்கிரஸ் கட்சியினரை வலியுறுத்தியுள்ளேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்