மத்திய அமைச்சரவையில் மாற்றம் ரெயில்வே மந்திரி பியூஷ் கோயலுக்கு நிதித்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது

மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது, ரெயில்வே மந்திரி பியூஷ் கோயலுக்கு நிதித்துறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. #CabinetReshuffle #PiyushGoyal #ArunJaitley

Update: 2018-05-14 16:01 GMT

புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி கடந்த சில மாதங்களாகவே சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட அருண்ஜெட்லி கடந்த மாதம் 15–ந் தேதி எம்.பி.யாக பதவியும் ஏற்றுக்கொண்டார். இதற்கிடையே, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வதே சிறந்தது என்று அவரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை அருண்ஜெட்லி அனுமதிக்கப்பட்டார்.

 ஜெட்லிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.

சிகிச்சைக்கு பின்பு அருண் ஜெட்லியும், சிறுநீரகம் தானம் செய்தவரும் நலமாக இருப்பதாகவும், நிதி மந்திரி வேகமாக குணமடைந்து வருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது, ரெயில்வே மந்திரி பியூஷ் கோயலுக்கு நிதிதுறை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டது. நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் நிலை சரியாகும் வரையில் பொறுப்பை கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மத்திய விளையாட்டுத்துறை மந்திரி ராஜ்யவர்தன் ரத்தோருக்கு கூடுதல் பொறுப்பாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை வழங்கப்பட்டு உள்ளது. ஸ்மிருதி இரானியிடம் இருந்து தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை ராஜ்யவர்தன் ரத்தோரிடம் மாற்றப்பட்டு உள்ளது. 

மேலும் செய்திகள்