ஆட்சி அமைக்க கவர்னர் அழைக்காவிட்டால் நாளை காங்கிரஸ்- ஜனதா தளம்(எஸ்) தர்ணா போராட்டம்

கர்நாடக ஆளுநர் ஆட்சியமைக்க அழைக்காவிடில் ராஜ்பவன் முன் நாளை தர்ணாவில் ஈடுபட காங்கிரஸ்-மஜத திட்டம் என தகவல் வெளியாகியது.

Update: 2018-05-16 10:21 GMT
பெங்களூரு

கர்நாடக சட்டசபை தேர்தலில்  தனிப்பெரும் கட்சியாக பாரதீய ஜனதா வெற்றி பெற்றது. 104 இடங்களைக் பாரதீய ஜனதா கைப்பற்றி உள்ளது.  காங்கிரஸ் கட்சி 78 தொகுதிகளிலும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 37 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. முல்பாகல் தொகுதியில் ஒரு சுயேச்சை வேட்பாளரும், ராணிபென்னூர் தொகுதியில் கர்நாடக பிரக்ஞாவந்த ஜனதா கட்சி வேட்பாளரும், ஒரு தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளரும் வெற்றி பெற்று உள்ளனர். இதனால் அங்கு தொங்கு சட்டசபை ஏற்பட்டு உள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க கவர்னரிடம் கோரிக்கை வைத்து உள்ளது. அதுபோல் பாரதீயஜனதாவும்  கவர்னரிடம் ஆட்சி அமைக்க கோரிக்கை வைத்து உள்ளது.

கர்நாடகாவில் ஆட்சி அமைக்க  கவர்னர் பாரதீய ஜனதாவை தான் அழைப்பார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில்   நாளை பதவியேற்பு விழாவுக்கு வருமாறு பாஜக தொண்டர்களுக்கு எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார். பாஜக தொண்டர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பப்பட்ட தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாளை பகல் 12.20 மணிக்கு எடியூரப்பா பதவி ஏற்பு விழா என்றும் வாட்ஸ்-அப்பில் செய்தி வெளியாகியுள்ளது. 

இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள மதசார்பற்ற ஜனதா தளம்- காங்கிரஸ் கவர்னர்  ஆட்சி அமைக்க அழைக்காவிட்டால்  மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் நாளை  கவர்னர் மாளிகை முன் தர்ணா போராட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளது.

கர்நாடகாவில் பாரதீய ஜனதாவை ஆட்சி அமைக்க  கவர்னர் அழைத்தால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

மேலும் செய்திகள்