தலித் தொழிலாளி கட்டி வைத்து அடித்துக் கொலை தடுக்க வந்த மனைவி மீதும் தாக்குதல்

குஜராத்தில் தொழிலாளி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில் இருவரை போலீஸார் கைது செய்தனர்.

Update: 2018-05-21 07:18 GMT
ராஜ்கோட்

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த தொழிலாளி முகேஷ் சாவ்ஜி வானியா (40). இவர் அங்குள்ள ஷாபார்- வேராவல் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.

ஞாயிற்றுக்கிழமை தொழிற்சாலைக்கு வந்த அவரை தொழிற்சாலை கேட்டில் கட்டி வைத்து 5 தொழிலாளர்கள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். பேன்ட் பெல்ட்டை கழற்றி 5 பேரும் அடித்தனர்.

வானியாவை திருடன் என்று நினைத்துக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. ஆனால் இவற்றை போலீஸார் உறுதிப்படுத்தவில்லை. அப்போது அங்கு வந்த அவரது மனைவி உள்பட இரு பெண்கள் தாக்குதலை தடுத்தபோது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதையடுத்து அவர்கள் உடனடியாக போலீஸாரை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர். வானியாவை ராஜ்கோட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்தனர். மீதமுள்ள 3 பேரை தேடி வருகின்றனர். குற்றவாளிகளை கைது செய்தால் மட்டுமே வானியாவின் உடலை பெறுவோம் என்று உறவினர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து ஜிக்னேஷ் மேவானி  கண்டனம் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளதாவது:-

தலித் சமூகத்தைச்  சேர்ந்த முகேஷ் வனியாவை மோசமாக தாக்கி உள்ளனர் ராஜ்கோட்டில் உள்ள தொழிற்சாலை உரிமையாளர்களால் அவர் கொலை செய்யப்பட்டார் மற்றும் அவரது மனைவி கொடூரமாக தாக்கப்பட்டு உள்ளார் என கூறி உள்ளார் 

மேலும் செய்திகள்