பிரதமர் நரேந்திர மோடியுடன் 20 நிமிடம் தனியாக ஆலோசனை கவர்னர் சந்திப்பு ஏற்படுத்திய பரபரப்பு

பிரதமர் மோடியுடன், தூத்துக்குடி கலவரம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் தனியாக ஆலோசனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-06-08 00:15 GMT
புதுடெல்லி,

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் கடந்த 4 மற்றும் 5-ந்தேதிகளில் மாநில கவர்னர்கள் மற்றும் துணைநிலை கவர்னர்களின் மாநாடு நடைபெற்றது.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தேசிய பாதுகாப்பு, வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக 3-ந்தேதி டெல்லி சென்ற தமிழக கவர்னர் பன்வாரி லால் புரோகித், டெல்லி சாணக்கியபுரியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்தார். 2 நாள் மாநாட்டில் கலந்துகொண்ட அவர், பின்னர் மத்திய மந்திரிகளை சந்தித்து பேசினார்.

கவர்னர் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. பன்வாரிலால் புரோகித் நேற்று காலை பிரதமர் மோடியின் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 20 நிமிடம் நடைபெற்றது. இருவரும் தனியாக சந்தித்து பேசினார்கள். அப்போது அதிகாரிகள் உள்பட யாரும் உடன் இருக்கவில்லை. இதன் காரணமாக அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்பது வெளியாகவில்லை.

இருந்தபோதிலும் காவிரி பிரச்சினை, தூத்துக்குடி கலவரம், தமிழக அரசியல் நிலவரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து பிரதமருடன் பன்வாரிலால் புரோகித் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பேரணியின் போது கலவரம் ஏற்பட்டதால் நடைபெற்ற போலீஸ் துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியான சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகள் மத்திய, மாநில அரசுகளை குற்றம்சாட்டி இருக்கின்றன. இந்த நிலையில், பிரதமர் மோடியை கவர்னர் பன்வாரிலால் புரோகித் சந்தித்து பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்